சென்னை: தமிழகத்தில், அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும், பி.இ., முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று(ஆகஸ்ட் 1ம் தேதி) துவங்கின. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு சென்றனர்.
"கல்லூரிகளில், ராகிங் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அண்ணா பல்கலை தெரிவித்தது.
கடந்த ஜூன் இறுதியில் துவங்கிய, பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு, வரும் 4ம் தேதியுடன் முடிகிறது. அண்ணா பல்கலை நடத்திய கலந்தாய்வில் 90 ஆயிரம் மாணவர்கள் பி.இ., படிப்பில் சேர்ந்தனர். கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு மூலம், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கல்லூரிகளில் சேர்ந்தனர்.
"நாடு முழுவதும், பி.இ., முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆக., 1ம் தேதி துவங்க வேண்டும்" என்பது, ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு) உத்தரவு.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 560 பொறியியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு வகுப்புகள், நேற்று துவங்கின. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு சென்றனர்.
இது குறித்து, அண்ணா பல்கலை வட்டாரம் கூறியதாவது: முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்கள் அனைவருக்கும், ஒரு மாதம் வரை, பல்வேறு பயிற்சி அளிக்கப்படும். பிளஸ் 2 பாடத் திட்டங்களுக்கும், பி.இ., பாடத் திட்டங்களுக்கும் உள்ள வேறுபாடுகள், பாடத்திட்டங்கள் விவரம், அவற்றை எந்த வகையில் எதிர்கொண்டு, சிறப்பாக படிக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு தகவல்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
சிறப்பாக படித்து தேர்ச்சி பெற முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் பயிற்சி அமையும். ஒரு மாதத்திற்குப் பிறகே, பி.இ., பாடம் சார்ந்த வகுப்புகள் ஆரம்பிக்கும்.
கல்லூரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்தால், சீனியர் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த தகவல்களை மாணவர்கள் மத்தியில் தெரிவிக்கவும், தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். ராகிங் செய்தால், என்னென்ன தண்டனைகள் வழங்கப்படும் என்ற விவரங்களை கல்லூரி வளாகங்களில், ஆங்காங்கே, அறிவிப்பு பலகைகளாக வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அண்ணா பல்கலை வட்டாரம் தெரிவித்தது.
No comments:
Post a Comment