நாடு முழுவதும் 519 நீட் மாணவர்களின் எம்.பி.பி.எஸ்., சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ள சூழ்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்துள்ள மோசடியை விசாரிக்க வேண்டும்’ என, பெற்றோர் மாணவ சங்கங்கள் போர்க்கொடி துாக்கியுள்ளன.
நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நீட் தேர்வு மூலம் மட்டும் நிரப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான முதல்கட்ட தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கடந்தாண்டு மே மாதம் நடத்தியது. நாடு முழுவதிலும் இருந்து ஆறு லட்சம் பேர் நீட் தேர்வை எழுதினர்.
தேர்வு முக்கியமா இல்லையா என்ற குழப்பம் நீடித்ததால் பல பேர் தேர்வு எழுதவில்லை. இதையடுத்து, ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்டத் தேர்வு நடத்தி ரிசல்ட் வெளியிடப்பட்டது.
மொத்தமுள்ள 60 ஆயிரம் எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு 6 லட்சம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, தனியார் மருத்துவக்கல்லுாரிகளில் சேர விண்ணப்பித்திருந்தனர்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களின் படி, நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் விண்ணப்பத்தினை பெற்று ஒருங்கிணைந்த முறையில் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த வழிகாட்டுதல்களை பல மாநிலங்கள் மீறின. இது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு புகார்கள் சென்றன. இதனையடுத்து நாடு முழுவதும் 17 தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கையை ஆய்வு செய்த இந்திய மருத்துவ கவுன்சிலிங் 519 மாணவர்களின் எம்.பி.பி.எஸ்., சேர்க்கையை ரத்து செய்துள்ளது.
அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 14 தனியார் கல்லுாரிகளில் 481 மாணவர்களின் சீட்டுகளும், கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் இருந்து 38 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., சேர்க்கையும் பறிபோய் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் நீட் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக ஆரம்பத்தில் இருந்தே, புதுச்சேரி மாணவர், பெற்றோர் சங்கங்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.
புதுச்சேரி மாநிலத்தில் தனியார் கல்லுாரிகளில் நடந்த நீட் முறைகேடு விஷயங்களை சேகரித்துள்ள பெற்றோர் அமைப்புகள் தற்போது இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு புகார் அனுப்பியுள்ளன.
அதில், புதுச்சேரி நீட் அட்மிஷன் கமிட்டி சேர்மன் சித்ரா வெங்கட்ராமன், தலைமை செயலருக்கு அனுப்பிய, நீட் விதிமுறை மீறல்களை சுட்டிக்காட்டி புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன.
நீட் மாணவர் சேர்க்கையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். உச்சநீதிமன்றம் கெடு விதித்த 30.9.201௬க்கு பிறகு சட்டவிரோதமாக புதுச்சேரி மாநிலத்தில் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது என, முறையிட்டுள்ளன.
இது போன்ற சூழ்நிலையில் நீட் மாணவர் சேர்க்கை புகார்களை பெற்ற கையோடு விசாரணையும் முடுக்கிவிட இந்திய மருத்துவ கவுன்சில் திட்டமிட்டுள்ளதால், தனியார் மருத்துவக் கல்லுாரிகள் கலக்கமடைந்துள்ளன.
No comments:
Post a Comment