முதுகலை மருத்துவ படிப்புகளில், 50 சதவீத இடங்களை, தனியார் மருத்துவ கல்லுாரிகள் ஒதுக்கீடு செய்ததா என்பதற்கு, தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, டாக்டர் காமராஜ் தாக்கல் செய்த மனுவில், ’தனியார் மருத்துவ கல்லுாரிகளில், முதுகலை மருத்துவம் மற்றும் முதுகலை மருத்துவ பட்டய படிப்புகளில், அரசுக்கு, 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், அரசுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்வதில்லை.
எனவே, 50 சதவீத இடங்களை பெறும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என, கூறியிருந்தார். இதேபோன்று, சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:
இந்த மனுக்களுக்கு, தமிழக அரசு, மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதில் அளிக்க வேண்டும். தனியார் மருத்துவ கல்லுாரிகளும், பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழக அரசை பொறுத்தவரை, கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். முதுகலை மருத்துவ கல்வி விதிமுறைகளின்படி, முதுகலை படிப்புகளில், 50 சதவீத இடங்கள் அரசுக்கும், 50 சதவீதம் நிர்வாகத்திற்கும் என, பிரிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறை ரத்து செய்யப்படவில்லை.
எனவே, தனியார் மருத்துவ கல்லுாரிகள், அரசுக்கான, 50 சதவீத இடங்களை ஒதுக்கியிருக்க வேண்டும். அதனால், 50 சதவீத இடங்களை தனியார் மருத்துவ கல்லுாரிகளிடம் இருந்து, 2000ம் ஆண்டு முதல் தமிழக அரசு பெற்றுள்ளதா என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைகள் உட்பட ஒவ்வொரு மருத்துவ கல்லுாரியிலும், முதுகலை படிப்புகளில் மொத்தம் எத்தனை இடங்கள் உள்ளன?* இந்த மொத்த இடங்களில், 2000ம் ஆண்டு முதல் எத்தனை இடங்களை, தனியார் மருத்துவ கல்லுாரிகள் அரசுக்கு ஒப்படைத்திருக்க வேண்டும்?
அப்படி இடங்கள் ஒப்படைக்கப்பட்டு இருந்தால், எத்தனை எண்ணிக்கையில், இடங்கள் ஒப்படைக்கப்பட்டன?
அரசுக்கும், தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கும் இடையேயான இட பகிர்வு முறை, ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்படுகிறதா?
இடங்களை பகிர்வு செய்திருக்கவில்லை என்றால், அந்த மருத்துவ கல்லுாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா?
அப்படி எடுக்கப்படவில்லை என்றால், தவறு செய்த தனியார் மருத்துவ கல்லுாரிகள் மீது, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
இடங்கள் பகிர்வு தொடர்பாக, மாநில அரசு என்ன முடிவு எடுத்துள்ளது?இந்த வழக்கில் எழுப்பப்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண, மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட வேண்டும்.
ஏப்., 4ம் தேதி, கவுன்சிலிங் நடக்க உள்ளதால், தமிழக அரசின் நிலையை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.எனவே, ஏப்., 3க்குள், தமிழக அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும். மாணவர்கள் சேர்க்கையை பொறுத்தவரை, சட்டப்படி, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த வழக்கு விசாரணை, ஏப்., 3க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment