Sunday, July 16, 2017

அகில இந்திய கவுன்சிலிங்; 4,018 பேருக்கு மருத்துவ சீட்!

அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், 4,018 பேர் இடம் பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 15 சதவீத எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய கவுன்சிலிங் ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன. தமிழகத்தில் இருந்து, 456 எம்.பி.பி.எஸ்., மற்றும், 30 பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நாடு முழுவதும், 4,100 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இடங்கள், அகில இந்திய கவுன்சிலிங்கில் இடம் பெற்றுள்ளன. இதற்கான முதற்கட்ட கவுன்சிலிங், 13, 14ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், 4,018 பேர் இடங்கள் பெற்றுள்ளனர். அவர்கள், வரும், 22ம் தேதிக்குள் தேர்ந்தெடுத்த கல்லுாரிகளில் சேர வேண்டும்.

சேராதவர்களின் இடங்கள் காலி இடமாக அறிவிக்கப்பட்டு, ஆக., 5 முதல், 7 வரை நடைபெறும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் சேர்க்கப்படும். இதில், இடம் பெற்றவர்கள், ஆக., 9 - 16க்குள் மருத்துவ கல்லுாரிகளில் சேர வேண்டும். 

அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதமுள்ள இடங்கள், ஆக., 16 மாலை, 5:00 மணிக்கு பின், மாநில ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்படும்.

No comments:

Post a Comment