Thursday, June 5, 2014

பி.இ. காலியிடங்கள் அதிகரிப்பு: படிப்புகளை கைவிடும் கல்லூரிகள் உயர்வு
பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்து வருவதைத் தொடர்ந்து, பல்வேறு படிப்புகளை கைவிடும் நிலைக்கு தனியார் பொறியியல் கல்லூரிகள் தள்ளப்பட்டுள்ளன.
பி.டெக். தகவல் தொழில்நுட்பம், இசிஇ, எம்.சி.ஏ., எம்.பி.ஏ. போன்ற படிப்புகளை கைவிட 2014-15 கல்வியாண்டில் 80-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்துள்ளன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள், கல்லூரி வளாகத் தேர்வுக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து கல்வித் தரம் குறைந்தது ஆகியவையே இதற்குக் காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.
ரூ. 5 லட்சம், ரூ. 7 லட்சம், ரூ. 10 லட்சம், ரூ. 13 லட்சம் வரை இசிஇ, சிஎஸ்இ படிப்புகள் விலை போயிக்கொண்டிருந்த காலம் மாறி, கடந்த 2012-13, 2013-14 கல்வியாண்டுகளில் பிரபல பொறியியல் கல்லூரிகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்று மாணவர்களைப் பிடித்தத் தகவலும் இப்போது தெரியவந்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீடு இடங்களை முழுமையாக நிரப்புவதற்காக ஆந்திர மாநிலத்துக்குச் சென்று மாணவர்களைப் பிடித்துள்ளனர்.
இதுபோல் கோவை, ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரிகள் கேரளத்துக்குச் சென்று மாணவர்களைப் பிடித்து வந்துள்ளனர். இதில் சில கல்லூரிகள் வகுப்புகள் தொடங்கி ஒரு மாதத்துக்குப் பிறகுகூட நன்கொடையை வெகுவாகக் குறைத்து மாணவர் சேர்க்கையை நடத்தியுள்ளன.
நிலைமை இப்போது மேலும் மோசமாகியிருப்பதால், பல கல்லூரிகள் படிப்புகளை இழுத்து மூடும் நிலைக்கும், மாணவர் சேர்க்கை இடங்களை குறைக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன. சில பிரபல கல்லூரிகள் நன்கொடை தொகையை வெகுவாகக் குறைப்பதற்கும் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலை காரணமாக, பல்வேறு படிப்புகளை இழுத்து மூடும் கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு உயர்ந்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பி.டெக். தகவல் தொழில்நுட்ப படிப்பை கடந்த ஆண்டில் 19 கல்லூரிகள் இழுத்து மூடின. இப்போது 2014-15 கல்வியாண்டில் இந்தப் படிப்பை இழுத்து மூட 39 கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.
இசிஇ, எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளை இழுத்து மூட விண்ணப்பித்திருக்கும் கல்லூரிகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம் என்கின்றனர் பல்கலைக்கழக நிர்வாகிகள்.
இதுபோல் இசிஇ, சிஎஸ்இ போன்ற முக்கியப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை இடங்களைக் குறைத்துக் கொள்ள 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இம்முறை விண்ணப்பித்துள்ளன.
வரும் கல்வியாண்டில் மண்டலம் வாரியாக கைவிடப்படும் படிப்புகள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கை விவரம்:
படிப்புகள் சென்னை கோவை திருச்சி மதுரை திருநெல்வேலி
பி.டெக். - ஐ.டி. 11 15 5 2 6
பி.இ. - சி.எஸ்.சி. 2 0 0 1 0
எம்.சி.ஏ. 12 5 1 3 1
எம்.பி.ஏ. 7 6 0 2 0
படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை 240-லிருந்து 120 ஆகவும், 120-லிருந்து 60-ஆகவும் குறைக்கும் கல்லூரிகள் விவரம்:
படிப்புகள் சென்னை கோவை திருச்சி மதுரை திருநெல்வேலி
பி.டெக். - ஐ.டி. 0 2 0 0 0
பி.இ. - சி.எஸ்.சி. 5 2 1 2 1
பி.இ. - இசிஇ 3 2 1 0 0

Wednesday, June 4, 2014

495 பொறியியல் கல்லூரிகளின் தர வரிசை: அண்ணா பல்கலை அறிவிப்பு

கடந்த, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், 495 பொறியியல் கல்லூரிகளில் நடந்த பல்வேறு, 'செமஸ்டர்' தேர்வுகளின் அடிப்படையில், தர வரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளின் தர நிலவரம் தெரியாமல், கலந்தாய்வில், கல்லூரியை தேர்வு செய்ய வேண்டிய நிலையை சுட்டிக்காட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பொறியியல் கல்லூரிகளின், தேர்ச்சி சதவீத அடிப்படையில், கல்லூரிகளின் தர வரிசை பட்டியலை வெளியிட, அண்ணா பல்கலைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில், 2012 மற்றும் 13ல், அரசு பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என, 495, கல்லூரிகளில் நடந்த பல்வேறு, 'செமஸ்டர்' தேர்வுகளின், தேர்ச்சி அடிப்படையில், தர வரிசை பட்டியலை, அண்ணா பல்கலை, நேற்று, தன் இணையதளத்தில் (www.annavuiv.edu) வெளியிட்டது. அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், நான்கு கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற, 28 பொறியியல் கல்லூரிகள் விவரம், பட்டியலில் சேர்க்கப்படவில்லை. 'இந்த கல்லூரிகளை, தர வரிசை பட்டியலில் சேர்க்க, உயர் நீதிமன்றம் உத்தரவிடப்படாததால், சேர்க்கவில்லை' என, பல்கலை வட்டாரம் தெரிவித்தது. ஒரே பெயர் கொண்ட கல்லூரிகளின் பெயர் பட்டியலும், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அகர வரிசைப்படி, கல்லூரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து, அண்ணா பல்கலை, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், வெங்கடேசன் கூறியதாவது: இரு ஆண்டுகளிலும், இறுதி, 'செமஸ்டர்' தேர்வு அடிப்படையில், தர வரிசை பட்டியல் வெளியிடவில்லை. 2012, நவம்பர், டிசம்பரில் நடந்த, 1, 3, 5, 7 ஆகிய, 'செமஸ்டர்' தேர்வு முடிவுகளின் அடிப்படையிலும், 2013ல், 2, 4, 6, 8 ஆகிய, 'செமஸ்டர்' தேர்வு முடிவுகளின் அடிப்படையிலும், தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

அடையாளம் காண உதவும்:

ஒவ்வொரு கல்லூரியின், வெறும் தேர்ச்சி சதவீதத்தை மட்டும் கணக்கிடாமல், அந்த கல்லூரியின், உள்கட்டமைப்பு வசதிகள், தகுதியான ஆசிரியர்கள், ஆய்வக வசதிகள், பணி நியமனத்திற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட, அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து, அதனடிப்படையில், தர வரிசை பட்டியலை வெளியிட்டால் மட்டுமே, மாணவர்களுக்கு பலன் கிடைக்கும். நேற்று வெளியான பட்டியல், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது இல்லை என்பதால், மாணவர்களுக்கு, பெரிய அளவில், பயன் கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான். எனினும், ஓரளவிற்கு, நல்ல கல்லூரியை அடையாளம் காண, இந்த பட்டியல் உதவும்.
அண்ணா பல்கலை இணையதளத்தில் பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல் வெளியீடு

அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல் அண்ணா பல்கலைக் கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தில் 542 பொறியியல் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. இவற்றின் செயல்பாடுகள் குறித்து அண்ணா பல்கலைக் கழகம் அறிக்கை வெளியிட வேண்டும் என்று தனி நபர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி வீதம் குறித்து பட்டியல் ஒன்றை அண்ணா பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்டது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் மொத்தம் 542 பொறியியல் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. அவற்றில் 506 கல்லூரிகள் பிஇ மற்றும் பி.டெக் படிப்புகளை நடத்துகின்றன. 36 கல்லூரிகள் பி.ஆர்க் படிப்பை நடத்துகின்றன. இந்த கல்லூரிகளில் 2012ல் நடந்த தேர்வில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், தேர்ச்சி வீதம், ரேங்க் (பெர்பாமன்ஸ்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
அதேபோல 2013ல் ஜூன், ஜூலை மாதங்களில் நடந்த தேர்வுகள், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோர் விவரங்களும் இடம் பெற்றுள்ளன. இவை தவிர 2013ம் ஆண்டில் நடந்த மாணவர் சேர்க்கையில் விண்ணப்பித்து இருந்த மாணவர்களின் கட்ஆப் விவரங்கள், ஒவ்வொரு கல்லூரியை பற்றிய தனிப்பட்ட விவரங்கள் ஆகியவற்றையும் அண்ணா பல்கலைக் கழகம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் மூலம் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர உள்ள மாணவர்கள், தாங்கள் சேர உள்ள கல்லூரியின் தரம் குறித்து ஓரளவுக்கு தெரிந்து கொள்ளலாம்.
5 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம்: ஒரு தனியார் கல்லூரியில் ஒருவர்கூட தேர்ச்சி இல்லை

பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இதுபோல் 5 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம் உள்ளது. இந்த தேர்ச்சி விகிதம் கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே மாதிரி பெயரில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளின் பட்டியலையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

2012 நவம்பர்-டிசம்பர் மாத பல்கலைக்கழக தேர்வில் இணைப்புக் கல்லூரி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் 2013 ஏப்ரல்-மே மற்றும் நவம்பர்-டிசம்பர் மாத பல்கலைக்கழக தேர்வுகளில் உறுப்புக் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் 2013-ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் பல்கலைக்கழக தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 506 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் 140 மாணவர்கள் தேர்வை எழுதியுள்ளனர். இவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இந்தக் கல்லூரி பூஜ்ஜியம் தேர்ச்சி விகிதத்துடன் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

இதேபோல 5 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம் உள்ளது. பெரம்பலூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 55 பேர் தேர்வெழுதியதில் ஒருவர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார்.

திண்டுக்கலைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் 21 பேர் தேர்வெழுதி ஒருவர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரியில் 86 பேர் தேர்வெழுதி 5 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோவையைச் சேர்ந்த ஒரு தனியார் கல்லூரியில் 25 பேர் தேர்வெழுதியதில் 2 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரியலூரைச் சேர்ந்த ஒரு கல்லூரியில் 86 பேர் தேர்வெழுதி 7 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் இந்தப் பருவத் தேர்வில் 333 பொறியியல் கல்லூரிகள் 50 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன. 88 கல்லூரிகள் 60 சதவீதத்துக்கு குறைவாகவும், 50 பொறியியல் கல்லூரிகள் 70 சதவீதத்துக்கு குறைவாகவும், 25 கல்லூரிகள் 80 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தையும் பெற்றுள்ளன.

தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 506 பொறியியல் கல்லூரிகளில் 10 கல்லூரிகளில் மட்டுமே 80 சதவீதத்துக்கும் மேல் மாணவர் தேர்ச்சி விகிதம் உள்ளது.

திருச்சியைச் சேர்ந்த ஒரு தனியார் கல்லூரி அதிக மாணவர் தேர்ச்சி விகிதத்தைப் பெற்று 2013 ஏப்ரல்-மே மற்றும் நவம்பர்-டிசம்பர் ஆகிய இரு பல்கலைக்கழக தேர்வுகளிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

பின்னடைவை சந்தித்துள்ள பிரபல கல்லூரிகள்: கடந்த சில ஆண்டுகளாக மாணவர் தேர்ச்சி விகிதத்தில் முன்னிலை வகித்து வந்த சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பிரபல கல்லூரிகள், இப்போது தேர்ச்சி விகிதத்தில் பின்னடைவை சந்தித்துள்ளன.

இந்த மாவட்டங்களைச் சேர்ந்த சில கல்லூரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை 88 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றிருந்தன. ஒருசில கல்லூரிகள் முதலிடத்தையும் பிடித்து வந்தன.

இந்த நிலையில் 2013 பல்கலைக்கழகத் தேர்வில் இந்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பிரபல கல்லூரிகள் 80 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.

மேலும் பல்கலைக்கழகத் தேர்வில் எந்தவொரு பொறியியல் கல்லூரியும் 100 சதவீத தேர்ச்சியை எட்டவில்லை.

பி.ஆர்க்.: பி.ஆர்க். படிப்பை 38 கல்லூரிகள் வழங்குகின்றன. 2013 நவம்பர்-டிசம்பர் பல்கலைக்கழகத் தேர்வில் 17 கல்லூரிகள் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன.

இரண்டு கல்லூரிகள் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன. திருச்சியைச் சேர்ந்த ஒரு கல்லூரியில் 45 மாணவர்கள் தேர்வெழுதியதில் 8 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்லூரியில் 11 பேர் தேர்வெழுதி 4 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொதுநல வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Tuesday, June 3, 2014

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 18-ந் தேதி கலந்தாய்வு: மருத்துவ கல்வி இயக்குனர் தகவல்

தமிழ்நாட்டில் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி, மதுரை அரசு மருத்துவக்கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி, கோவை அரசு மருத்துவக்கல்லூரி, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி என்பது உள்பட 19 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு 2 ஆயிரத்து 555 இடங்கள் உள்ளன. பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், இடஒதுக்கீடு அடிப்படையிலும் இந்த இடங்களில் சேர்க்கப்படுவார்கள்.

இதற்கான மாணவர்கள் சேர்க்கையை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குனரகம் மேற்கொண்டு வருகிறது. எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்பான பி.டி.எஸ். வகுப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் வழங்கப்பட்டன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு வந்துசேர நேற்று கடைசி நாள் ஆகும்.

இதுவரை 30 ஆயிரத்து 380 விண்ணப்ப படிவங்கள் விற்பனை ஆகியுள்ளன. அதில், 27 ஆயிரத்து 876 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. மேலும் சில விண்ணப்பங்களும் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் தரவரிசை பட்டியல் (ரேங்க்) 12-ந் தேதி வழங்கப்படும். அதைத் தொடர்ந்து தகுதியான மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு 18-ந் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும். பிளஸ்-2 முடித்த மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிந்துவிட்டால், மேற்கண்ட தேதிகளில் திட்டமிட்டப்படி, தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு நடைபெறும்.

இந்த தகவலை மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் கீதா லட்சுமி தெரிவித்தார்.

Monday, June 2, 2014

2,172 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 27,876 பேர் விண்ணப்பம்
தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 27,876 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த கல்வி ஆண்டில் மொத்தம் 29,569 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரித்துள்ளதையடுத்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைக்காது என்ற அச்சத்தில் 1,693 பேர் குறைவாக, மொத்தம் 27,876 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். சென்னை உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,172 எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க கடந்த மே 14-ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. விண்ணப்பத்தைப் பெறுவதற்கான காலக்கெடு கடந்த மே 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மொத்தம் 30,380 மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றனர். பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர திங்கள்கிழமை (ஜூன் 2) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கடைசி நாளில் 5,254 மாணவர்கள்: இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கு ஏராளமானோர் திங்கள்கிழமை நேரடியாக வந்து அங்கு வைத்திருந்த பெரிய மரப் பெட்டியில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தனர். கடைசி நாளான திங்கள்கிழமை மட்டும் 5,254 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளனர்.
தொடர்ந்து ரேண்டம் எண் வெளியீடு, தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறியதாவது:
ஜூன் 9-இல் ரேண்டம் எண்: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களில், ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பெற்றுள்ள மாணவர்களை வரிசைப்படுத்தி சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 27,876 மாணவர்களை வரிசைப்படுத்த வரும் 9-ஆம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கப்படும்.
முதல் கட்ட கலந்தாய்வு: மாணவர்கள் பெற்றுள்ள கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் வரும் 12-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் வெளியிடப்படும். தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கும். எம்.பி.பி.எஸ். இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 27-ஆம் தேதியும் இறுதிக்கட்ட கலந்தாய்வு செப்டம்பர் முதல் வாரத்திலும் தொடங்கும் என்றார் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி.

Sunday, June 1, 2014

ஜிப்மர் நுழைவுத் தேர்வு வரும் 8ம் தேதி நடக்கிறது

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, வரும் 8ம் தேதி நடக்கிறது. இத்தேர்வினை, 93 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், பொதுப் பிரிவு 50 இடங்கள், ஓ.பி.சி.,28, பழங்குடியினர்11 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. புதுச்சேரி மாணவர்களுக்கு பொதுப் பிரிவு23, ஓ.பி.சி.,11, எஸ்.சி., 6 இடங்கள் என மொத்தம் 40 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, கடந்த மாதம் 2ம் தேதி வரை ஜிப்மர் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டது. 93 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் 36 நகரங்களில், வரும் 8ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, ஆன் லைன் மூலம் நடக்கிறது. கடந்த 20ம் தேதி வரை ஹால் டிக்கெட் வழங்கப் பட்டது. இதுவரை ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், நாளை 2 ம் தேதி வரை புதுப்பிக்கப்பட்ட ஹால் டிக்கெட்டினை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப் பட்டுள்ளது.

பி.இ. விண்ணப்ப செய்திகள்

ரேண்டம் எண் ஜூன் 11ல் வெளியீடு பொறியியல் படிப்புக்கு ஜூன் 27ல் கவுன்சலிங் அண்ணா பல்கலை அறிவிப்பு

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது கவுன்சலிங் ஜூன் 27ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வருகிற 11ம் தேதி ரேண்டம் எண்ணும், 16ம் தேதி ரேங்க் பட்டியலும் வெளியிடப்படுகிறது. ஜூலை 28ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு கவுன்சலிங் நடக்கிறது. தமிழகத்தில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்காக அண்ணா பல்கலை மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் உட்பட 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 463 இடங்கள் உள்ளன.

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் 60 மையங்களில் கடந்த மே 3ம் தேதி முதல் வினியோகிக்கப்பட்டது. இதற்காக, 2 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டது. முதலில் மே 20ம் தேதி விண்ணப்பங்கள் வினியோகிப்பது கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாணவர்கள் வேண்டுகோளின்படி மேலும் ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது. அதாவது, மே 27ம் தேதி வரை விண்ணப்ப வினியோகம் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

மொத்தம் பொறியியல் படிப் பில் சேர 2 லட்சத்து 12 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில், 1 லட்சத்து 72 ஆயிரத்து 500 பேர் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர். கடந்த ஆண்டில் 2 லட்சத்து 35,211 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தவர்கள் ஒரு லட்சத்து 90,850 பேர். இவர்களில் ஒரு லட்சத்து 84,930 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக் கது. இது, கடந்த ஆண்டை விட 20 ஆயிரத்து 350 விண்ணப்பங்கள் குறைவு.

இந்நிலையில், வருகிற ஜூன் 23ம் தேதி முதல் கவுன்சலிங் தொடங்கும் என்று அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வருகிற ஜூன் 11ம் தேதியும், ரேங்க் பட்டியல் 16ம் தேதியும் வெளியிடப்படும். விளை யாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்த் தல் வருகிற 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும். விளை யாட்டு வீரர்களுக்கான ரேங்க் பட்டியல் 17ம் தேதி வெளியிடப்படும்.

இதையடுத்து விளை யாட்டு வீரர்களுக்கான கவுன்சலிங் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும். 25ம் தேதி மாற்று திறனாளிகளுக்கான கவுன்சலிங், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் ஜூன் 27ல் தொடங்கி ஜூலை 28ம் தேதி வரை ஒரு மாதம் நடக்கிறது. தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 9ம் தேதி முதல் ஜூலை20ம் தேதி வரை நடக்கிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் முடிந்ததும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கவுன்சலிங் விவரம்:

ரேண்டம் எண் வெளியீடு ஜூன் 11
ரேங்க் பட்டியல் ஜூன் 16
விளையாட்டு வீரர்களுக்கு ஜூன் 23, 24
மாற்று திறனாளிகளுக்கு ஜூன் 25
பொதுப் பிரிவினருக்கு ஜூன் 27 முதல் ஜூலை 28 வரை

Saturday, May 31, 2014

சென்னை: பி.இ., கலந்தாய்வு ஜூன் 23ம் தேதி துவங்கும் என அண்ணா பல்கலை அறிவித்தது. வரும் கல்வி ஆண்டில் பி.இ.- பி.டெக். படிப்புகளில் சேர 1.75 லட்சம் மாணவ மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.
இதையடுத்து மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்த அட்டவணையை அண்ணா பல்கலை அறிவித்தது.
அதன் விவரம்
* ரேண்டம் எண் வெளியீடு - 11.6.2014
* ரேங்க் பட்டியல் வெளியீடு - 16.6.2014
* விளையாட்டு பிரிவின் கீழ் பெறப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு - 13.6.2014 முதல் 16.6.2014 வரை
* விளையாட்டு பிரிவுக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு - 17.6.2014
* விளையாட்டு பிரிவுக்கான கலந்தாய்வு துவக்கம் - 23.6.2014 முதல் 24.6.2014 வரை
* மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு - 25.6.2014
* பொதுப்பிரிவு கலந்தாய்வு - 27.6.2014 முதல் 28.7.2014 வரை
* தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு - 9.7.2014 முதல் 20.7.2014 வரை.

Thursday, May 15, 2014

எம்.பி.பி.எஸ்., படிக்க மாணவர்கள் ஆர்வம் : முதல் நாளில் 12,138 விண்ணப்பம் வினியோகம்

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வாங்குவதில் மாணவர்கள் ஆர்வம் காட்டினர். முதல் நாளில், 12,138 பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர்.

கலந்தாய்வு : தமிழகம் முழுவதும், 19 அரசு மருத்துவ கல்லூரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி யும் உள்ளன. எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, அகில இந்திய ஒதுக்கீடு போக, 2,172 இடங்கள் உள்ளன. பி.டி.எஸ்., படிப்புக்கு, மாநில ஒதுக்கீட்டில், 85 இடங்கள் உள்ளன. இதுதவிர, 12 சுய நிதி கல்லூரிகளில் இருந்து, 900 இடங்கள் வரை, எம்.பி.பி.எஸ்., இடங்களும், 909 பி.டி.எஸ்., இடங்களும் மாநில ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும். இதற்கு, "கட் - ஆப்' மதிப்பெண் அடிப் படையில், மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு மூலம் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப வினியோகம், தமிழகம் முழுவதும் உள்ள, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியில், நேற்று துவங்கியது. காலை முதலே மாணவ, மாணவியர்
ஆர்வமுடன் குவிந்தனர்.

சமர்பிக்க வேண்டும் : ஒரே நாளில், தமிழகம் முழுவதும், 12,138 விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில், 1,531 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளனன. அரசின் எல்லா மருத்துவக் கல்லூரி
களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தும், விவரம் தெரியாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாணவ, மாணவியர், சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு வந்திருந்தனர்.விண்ணப்பங்கள், இம்மாதம், 30ம் தேதி வரை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூன், 2ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Wednesday, May 14, 2014

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ்.,படிப்புகளுக்கான விண்ணப்பம் வினியோகம் துவங்கியது

நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம்: 25 மாணவர்கள் கைது

பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்ற இன்ஜினியரிங், மருத்து நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டத்தி்ல் ஈடுபட்ட வட இந்திய மாநிலங்களை சேர்ந்த 25 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தி்ல வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் சிட்டி கிரைம் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டனர். ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதாக பீகார் 12, உ.பி. 8 ,ஜார்கண்ட், சட்டீஸ்கர், ம.பி. ஆகிய மாநிலங்களை சேர்ந்த 25 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காலண்டர் – மே 2014
மே மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிகள் ஆகியவற்றைக் காட்டும் காலண்டர் இது. தனியே எடுத்து பத்திரப்படுத்துங்கள்.
புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்புவோர் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 2.
புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்படத் தொழில்நுட்பம் தொடர்பான முதுநிலை சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 3.
அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிக்க அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு (AIPMT) நடைபெறும் தேதி: மே 4.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட். படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 9.
தமிழகத்தில் மார்ச் மாதம் நிறைவடைந்த பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: மே 9.
மேனேஜ்மெண்ட் படிப்புகளுக்காக அகில இந்திய மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் நடத்தும் MAT நுழைவுத் தேர்வு (காகிதத்தில்) நடைபெறும் தேதி: மே 4. கம்ப்யூட்டர் மூலம் நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 10.
அகில இந்திய கால்நடை மருத்துவப் படிப்பு (AIPVT) நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 10.
டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்சஸில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சமூக அறிவியல் படிப்புகளைப் படிக்க பிளஸ் டூ மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 10.
இந்தியன் ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் புள்ளியியல் இளநிலை பட்டப் படிப்பு படிக்க எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: மே 11.
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து இளநிலை சட்டப் படிப்பைப் படிக்க அகில இந்திய அளவில் CLAT நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 11.
பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் கல்வி நிலையத்தில் பல்வேறு பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோருக்கு பிட்சாட் ஆன்லைன் நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 14 முதல் ஜூன் 1 வரை.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 15.
சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃப்ஷரிஸ் (சிப்நெட்) நடத்தும் பேச்சலர் ஆஃப் ஃப்ஷரி சயின்ஸ் படிப்பில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 16.
புனேயிலுள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 17.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட். படிக்க நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 17.
திருவாரூர் உள்ளிட்ட 7 மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப் படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 17 மற்றும் மே 18.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 2ஏ எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: மே 18.
பயோ-டெக்னாலஜி முதுநிலை பட்டப் படிப்பில் சேர ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நடத்தும் ஒருங்கிணைந்த பயோ டெக்னாலஜி நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 19.
ஃபுட்வேர் டிசைன் அண்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிட்யூட்டில் பி.டெஸ். உள்ளிட்ட பல்வேறு படிப்புகளைப் படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 19.
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் பி.டெக்., மெரைன் என்ஜினீயரிங், பி.எஸ்சி. நாட்டிக்கல் சயின்ஸ், எம்.பி.ஏ. போன்ற பல்வேறு படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 20.
வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் (சி.எம்.சி.) எம்.பி.பி.எஸ்., பி.எஸ்சி. (நர்சிங்) உள்ளிட்ட படிப்புகளில் சேர எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: மே 23.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு சேர விரும்புவோர் விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 23.
திருச்சி உள்ளிட்ட நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் (என்.ஐ.டி.) எம்.சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 25.
மத்திய அரசுப் பணியில் ஜூனியர் என்ஜினீயரிங் பணிகளில் டிப்ளமோ மாணவர்களைச் சேர்க்க ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: மே 25.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 30.
புவனேஸ்வரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச், மும்பையில் உள்ள சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்சஸ் கல்வி நிறுவனங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி படிப்பில் சேர நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி : மே 31.
ரீஜினல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுக்கேஷனில் நான்காண்டுகளுக்கான ஒருங்கிணைந்த பி.எஸ்சி.எட். படிப்பில் சேர நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 31.
-புதிய தலைமுறை

Tuesday, May 13, 2014

என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் 3–வது வாரம் தொடங்கும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்

என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னையில் மட்டுமே நடத்தப்படும் என்றும், ஜூன் 3வது வாரம் கலந்தாய்வு தொடங்கும் என்றும் அண்ணாபல்கலைக்கழக அதிகாரி தெரிவித்தார்.

என்ஜினீயரிங் சேர்க்கை

தமிழ்நாட்டில் 570 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்பில் சேர அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் 2 லட்சம் உள்ளன. இது போக 85 ஆயிரம் இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ளன.

அரசு ஒதுக்கீட்டு இடங்களான 2 லட்சம் இடங்களில் சேர்வதற்காக அண்ணாபல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் 20–ந்தேதி வரை வழங்கப்பட உள்ளன. அந்த தேதிதான் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்கவும் கடைசி நாள். இப்போதே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் அனுப்பி வருகிறார்கள்.

சென்னையில் மட்டும் கலந்தாய்வு

கலந்தாய்வு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தென் மாவட்ட மாணவர்கள் சென்னைக்கு வருவது சிரமம் என்று கருதி சென்னை உள்பட 3 இடங்களில் நடைபெற்றது.

ஆனால் அப்போது கலந்தாய்வு நடத்துவது சிரமமாக இருந்தது. கம்ப்யூட்டர்கள் சரியாக இயங்கவில்லை. எனவே சென்னையில் மட்டும் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு இந்த வருடம் சென்னையில் உள்ள அண்ணாபல்கலைக்கழகத்தில் மட்டுமே என்ஜினீயரிங் சேர்வதற்கான கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு ஜூன் மாதம் 3–வது வாரத்தில் தொடங்கும் என்றார்.
மதிப்பெண் பட்டியல், 'டிசி'க்காக காத்திருக்க வேண்டாம்: அண்ணா பல்கலை வேண்டுகோள்

'பி.இ.,க்கு விண்ணப்பிக்க, மாற்றுச் சான்றிதழான, 'டிசி' மற்றும் மதிப்பெண் பட்டியலுக்காக, மாணவர்கள் காத்திருக்க வேண்டாம். இரண்டும் இல்லாமலும், பி.இ., விண்ணப்பத்தை அனுப்பலாம்,'' என, பி.இ., சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்திரியராஜ் தெரிவித்தார்.

பி.இ., படிப்பில் சேர, கடந்த ஒரு வாரத்தில், 1.68 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனையாகி உள்ளன. 'விண்ணப்பத்துடன், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், 'டிசி' ஆகியவை இணைக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள், மே 20ம் தேதி. ஆனால், வரும் 21ம் தேதி தான், மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது. மேலும், மதிப்பெண் பட்டியல் வழங்கும்போது, 'டிசி'யையும் சேர்த்து வழங்க, பள்ளிகள் திட்டமிட்டு உள்ளன. இதனால், இந்த இரு சான்றிழ்களும் இல்லாமல், 20ம் தேதிக்குள், விண்ணப்பத்தை அனுப்பலாமா என, மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, அண்ணா பல்கலை, பி.இ., சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்திரியராஜ் கூறியதாவது: இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தேர்ச்சி பட்டியலை, விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பினால் போதும். மதிப்பெண் பட்டியலை பெற்றபின், அதன் நகலை, தபால் மூலம், அண்ணா பல்கலைக்கு அனுப்ப வேண்டும். நாங்களும், தேர்வுத் துறை இயக்குனரகத்தில் இருந்து, 'சிடி' பெற்று, மதிப்பெண் சரியாக உள்ளதா என்பதை பார்ப்போம். மதிப்பெண் பட்டியல் நகலை அனுப்பும்போது, அதன் மேல் பகுதியில், பி.இ., விண்ணப்ப எண்ணை குறிப்பிட வேண்டும். அப்போது தான், குறிப்பிட்ட விண்ணப்பத்துடன், மதிப்பெண் பட்டியல் நகலை, எங்களால் இணைக்க முடியும். 'டிசி'க்காகவும், மாணவர் காத்திருக்க தேவையில்லை. மதிப்பெண் பட்டியல் நகலை அனுப்பும்போது, 'டிசி' நகலையும், சேர்த்து அனுப்பலாம்.இந்த இரு சான்றிதழுக்காக, பி.இ., விண்ணப்பம் அனுப்புவதில், கால தாமதம் செய்ய வேண்டாம். மாணவர்கள், உடனடியாக விண்ணப்பத்தை அனுப்பலாம். மாணவர்கள், கல்லூரி மற்றும் பாட பிரிவை தேர்வு செய்வதில், தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தபின், படிப்பில், ஆழ்ந்த கவனத்துடன் செயல்பட்டு, நன்றாக படித்தால், கண்டிப்பாக வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு, ரைமண்ட் தெரிவித்தார்.
வேளாண் படிப்புகளில் சேர மாணவர்களிடம் ஏக கிராக்கி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டப் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து திங்கள்கிழமை ஒரே நாளில் 7,075 பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளதாக மாணவர் சேர்க்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2014-15 கல்வியாண்டில் 13 பட்டப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி, திங்கள்கிழமை தொடங்கியது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் விண்ணப்பம் பெற வந்திருந்தனர்.

இந்த ஆண்டில் பட்டப் படிப்பில் சேர ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால், பல்கலைக்கழக வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் மூலம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய முதல் நாளில் 7,075 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 2,678 பேர் ஆன்லைனில் பதிவு செய்து, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர்.

வேளாண் பல்கலைக்கழகத்தின் இளநிலை படிப்புகளில் சேர ஜூன் 7-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டில் வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர மாணவ, மாணவிகளிடையே கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.

1,820 இடங்களுக்கு கடும் போட்டி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உறுப்புக் கல்லூரிகளில் 1,040 பேரும், இணைப்புக் கல்லூரிகளில் 780 பேரும் என மொத்தம் 1,820 பேர் சேர்க்கப்படுகின்றனர். இதில் இணைப்புக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தாலும், மீதமுள்ள 50 சதவீத இடங்கள் அந்தந்தக் கல்லூரிகளாலும் நிரப்படுகிறது.

2013-ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர ஓ.சி. பிரிவினருக்கு 196.00 கட் ஆஃப் மதிப்பெண்கள் இருந்தது. அதேபோல பி.சி. பிரிவினருக்கு 189.00-ம், பி.சி.எம். பிரிவினருக்கு 193.25-ம், எம்.பி.சி. பிரிவினருக்கு 187.25-ம், எஸ்.சி. பிரிவினருக்கு 178.50-ம், எஸ்.சி.ஏ. பிரிவினருக்கு 188.25-ம், எஸ்.டி. பிரிவினருக்கு 188.00 கட் ஆஃப் மதிப்பெண்கள் இருந்தது.

வேளாண் படிப்புகளில் சேர கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 40,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய முதல் நாளே 7,075 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம். இன்னும் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 7-ஆம் தேதி வரை காலக்கெடு உள்ளதால், இந்த ஆண்டில் வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.

அதேபோல 1,820 இடங்களே உள்ளதால், மாணவர்களிடையே கடும் போட்டியும், கட் ஆஃப் மதிப்பெண்ணும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டில் முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஜூலை 14-ஆம் தேதி முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வகுப்புகள் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அரசாணையை மீறி மாணவர் சேர்க்கை நடத்தும் கல்லூரிகள்பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான சில மணி நேரங்களிலேயே எந்தக் கல்லூரியில் எந்தப் படிப்பை தெரிவு செய்வது என்பதில் மாணவருக்கு மட்டுமல்ல, பெற்றோரும் நிதானமின்றி அவசரம் காண்பிக்கின்றனர். ஐ.டி. மோகம் குறைந்த நிலையில், பொறியியல் படிப்புகளில் சேரும் ஆர்வம் மாணவர்களிடையே குறைந்து வருகிறது.

இதனால் பி.காம். பி.பி.எம். படிப்புகள் மற்றும் அடிப்படை கணித படிப்புகளில் பி.எஸ்சி. கணிதம், வேதியியல், இயற்பியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

தேர்வு முடிவுகள் வெளியானதும், பெற்றோர் தங்களது குழந்தைகளை எந்த படிப்பில் சேர்ப்பது என்று அவசரம் காட்டுகின்றனர். இந்த அவசர நிலையை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள், பணத்தை வாங்கி

மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்து விடுகின்றனர். மாணவர்களும் ஒருவித பதபதைப்புடனே படிப்புகளில் சேரும் சூழ்நிலை உள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிந்து 10 நாள்களுக்குப் பிறகே கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் என்று தமிழக அரசின் அரசாணை உள்ளது. ஆனால், இந்த அரசாணையை தனியார் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் கண்டுகொள்வதில்லை. அதேபோல, பிளஸ் 2 தேர்வு வெளியானவுடனேயே மாணவர் சேர்க்கை நடத்துகின்றனர்.

கடந்த இரு ஆண்டுகளாக வேளாண் படிப்புகளில் சேர மாணவ, மாணவியர் ஆர்வம் காண்பிக்கின்றனர். இந்தப் படிப்பை முடித்தவுடன் ஏதாவது ஒரு வங்கியிலோ அல்லது உர நிறுவனங்கள், விதை நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் துறைகளில் வேலை கிடைக்கிறது. வேளாண் ஆராய்ச்சிகளும் விரிவாக நடந்து வருவதால், வேளாண் படிப்புகளுக்கு நல்ல மவுசு உள்ளது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிளஸ் 2 விடைத்தாள் நகல்: 57 ஆயிரம் பேர் விண்ணப்பம்
பிளஸ் 2 விடைத்தாள் நகல்: 57 ஆயிரம் பேர் விண்ணப்பம்

ஆசிரியர் டிப்ளமோ படிப்பு: நாளை முதல் விண்ணப்பம்

கால்நடை சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம்

5 ஆண்டு சட்டப் படிப்பு: ஜூலையில் கலந்தாய்வு

கால்நடை மருத்துவப் படிப்பு: கட்-ஆஃப் மதிப்பெண் 0.5 அதிகரிக்கும்: துணைவேந்தர் தகவல்

அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ்., பிடிஎஸ்: இதுவரை 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு இல்லை: சான்றிதழ் இல்லாமல் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பி.இ. கலந்தாய்வு விண்ணப்பம்: 1,500 பேர் மட்டுமே சமர்ப்பிப்பு

Friday, May 9, 2014

என்ஜினீயரிங் – மருத்துவம் கட்–ஆப் மதிப்பெண் உயருகிறது

பிளஸ்–2 தேர்வு முடிவு இன்று வெளியானது.

கடந்த ஆண்டை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் மட்டுமின்றி பாட வாரியாக 200–க்கு 200 எடுத்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

மருத்துவம், என்ஜினீயரிங் உயர் படிப்புகளில் சேருவதற்கான அடிப்படையாக உள்ள பாடங்களில் மாணவ–மாணவிகள் அதிக அளவில் மதிப்பெண்களை குவித்துள்ளனர். என்ஜினீயரிங் கட்–ஆப் மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் கடந்த ஆண்டை விட 200–க்கு 200 அதிக அளவில் எடுத்துள்ளனர்.

கணிதம் பாடத்தில் 3882 பேர் சென்டம் எடுத்துள்ளனர். இயற்பியல் பாடத்தில் 2710 பேரும், வேதியியல் பாடத்தில் 1693 பேரும் சென்டம் எடுத்து உள்ளனர். கடந்த வருடத்தை காட்டிலும் இந்த ஆண்டு 4398 பேர். இந்த மூன்று பாடங்களிலும் 200–க்கு 200 எடுத்துள்ளனர்.

இதனால் என்ஜினீயரிங் கட்–ஆப் மதிப்பெண் ஒன்று அளவில் கூட வாய்ப்பு உள்ளது.

உதாரணத்திற்கு ஒரு என்ஜினீயரிங் கல்லூரியின் கடந்த ஆண்டு கட்–ஆப் மார்க் 198–ஆக இருந்தால் இந்த வருடம் 199 ஆக உயர வாய்ப்பு உள்ளது.

இதே போல எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கான கட்–அப் மதிப்பெண்ணும் கூடுகிறது.

மருத்துவ படிப்பில் சேருவதற்கான உயிரியல் பாடத்தில் மாணவர்களின் சென்டம் கடந்த ஆண்டை விட சற்று குறைவாக இருந்தாலும் கூட இயற்பியல், வேதியியல் பாடங்களில் 200–க்கும் 200 பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மருத்துவ கட்–ஆப் மதிப்பெண் 0.5 சதவிதம் உயர வாய்ப்பு உள்ளது.

அதாவது அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த ஆண்டு கட்–ஆப் மார்க் 198 ஆக இருந்தால் இந்த வருடம் 198.5 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, May 8, 2014

பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை மே 13ல் விண்ணப்பம்
அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில், 2014 - 15ல், நேரடியாக, இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் சேர, விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.
மே 13 முதல், ஜூன் 5 வரை, காலை, 10 மாலை 5 மணி வரை, 34 மையங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். 300 ரூபாய்க்கு வரைவோலை எடுத்து, "செயலர், இரண்டாம் ஆண்டு பி.இ., பி.டெக் பட்டப்படிப்பு சேர்க்கை 201, அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி' என்ற பெயரில், மையங்களில் கொடுத்து, விண்ணப்பங்களை நேரடியாக பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜூன் 6, மாலை 5 மணிக்குள், வந்து சேர வேண்டும். சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஜூன் கடைசி வாரத்தில், காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும். தரவரிசை பட்டியல், அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி இணைய தளத்தில் (www.accet.in) வெளியிடப்படும்.

Wednesday, May 7, 2014

ரஷ்யாவில் மருத்துவம், பொறியியல் படிப்பு: கல்விக் கண்காட்சிக்கு அழைப்பு

சென்னை: பிளஸ் 2 வகுப்பு முடித்த பள்ளி மாணவர்கள் ரஷ்யாவில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பதற்கான சிறப்பு கல்விக் கண்காட்சி ரஷ்ய தூதரகத்தில் நடைபெற உள்ளது.
ரஷ்யாவில் மருத்துவம் மற்றும் பொறியில் படிப்பது குறித்த சிறப்பு கல்வி கண்காட்சி வரும் 10, 11ம் தேதிகளில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில் நடைபெற உள்ளது. அதில் மருத்துவம், பொறியில், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் பாடப்பிரிவுகளை சேர்ந்த 11 பல்கலைகள் கலந்து கொள்கின்றன. மேலும், பிளஸ் 2 வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என 2 மொழியிலும் படித்து 80 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியரில் 40 பேருக்கு தங்கும் வசதி, கல்வி கட்டணம் ஆகியவற்றிற்கு சிறப்பு கல்வி உதவி தொகை வழங்கப்படும்.
எவ்வளவு செலவாகும்?
இதுகுறித்து தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் டிமிட்ரி வி. லொமகின் கூறியதாவது: தற்போது ரஷ்யாவில் ஐந்தாயிரம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த ஆண்டை விட 10 சதவீதம் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடக்க உள்ள கல்வி கண்காட்சியில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான வழிமுறைகள், மாணவர்களுக்கு விளக்கப்படும். ரஷ்ய மொழியில் படிக்க ஓராண்டிற்கு கல்வி கட்டணம் 1,200 முதல் 4,000 அமெரிக்க டாலர்கள் வரையும், ஆங்கிலத்தில் படிக்க 2,400 முதல் 6,500 டாலர்கள் வரையும் செலவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆறு ஆண்டுகள் மருத்துவ படிப்பு ரஷ்ய பல்கலைகளில் அங்கீகாரம் பெற்ற இந்திய பிரதிநிதி ரவிச்சந்திரன் கூறியதாவது: ரஷ்யாவில் வழங்கப்படும் மருத்துவ பட்டம் இந்திய மருத்துவ கவுன்சில், யுனெஸ்கோ, அமெரிக்கா மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது, ரஷ்யாவில் கல்விக் கட்டணம் குறைவு. ரஷ்ய மொழியில் மருத்துவம் படிக்க 7 ஆண்டுகளும், ஆங்கிலத்தில் படிக்க 6 ஆண்டுகளும் செலவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தகுதி என்ன?
பிளஸ் 2 வகுப்பில் பொது பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., / எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். மாணவ மாணவியர் மதிப்பெண் சான்றிதழுடன், வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் கண்காட்சியில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 044 - 2498 8215 / 92822 21221 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.