Wednesday, July 30, 2014

பொறியியல் கலந்தாய்வு முடிவதற்கு வியாழக்கிழமையுடன் (ஜூலை 31) சேர்த்து 5 நாள்களே உள்ள நிலையில் 86 ஆயிரம் பேர் பல்வேறு பிரிவுகளைத் தேர்வு செய்துள்ளனர்.
இதில், அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ள பிரிவுகளில் தொடர்ந்து மெக்கானிக்கல் பிரிவே முதலிடம் வகிக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஆகஸ்ட் 4-ஆம் தேதியோடு முடிவடையவுள்ளது.
கலந்தாய்வில் மொத்தமுள்ள 2,04,079 இடங்களில் 86,031 இடங்கள் மட்டுமே இதுவரை நிரம்பியுள்ளன.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 1,27,858 பேரில், 41,485 மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளனர்.
இதில், எப்போதும் இல்லாத அளவுக்கு புதன்கிழமை அதிகமானோர் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளனர். மொத்தம் அழைக்கப்பட்ட 8,832 பேரில் 3,866 மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளனர்.
இதுவரை இடங்களைத் தேர்வு செய்தவர்களில் 20,932 பேர் மெக்கானிக்கல் பிரிவைத் தேர்வு செய்துள்ளனர்.
இந்தப் பிரிவில் மொத்தம் 43,210 இடங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு அடுத்தபடியாக இசிஇ பிரிவில் மொத்தமுள்ள 41,484 இடங்களில் 16,388 இடங்கள் நிரம்பியுள்ளன.
இதுவரை நான்காம் இடத்தில் இருந்து வந்த சிவில் பிரிவு, மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது. இந்தப் பிரிவில் உள்ள 28,674 இடங்களில் 13,203 இடங்கள் நிரம்பியுள்ளன. பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் மொத்தமுள்ள 32,614 இடங்களில் 11,319 இடங்கள் நிரம்பியுள்ளன.
பி.இ. தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 13,212 இடங்களில் வெறும் 4,399 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
கலந்தாய்வு முடிய வியாழக்கிழமையோடு சேர்த்து இன்னும் 5 நாள்கள் உள்ளன என்பதால், முடிவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்கும் நிலை உருவாகும் எனக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment