Sunday, July 27, 2014

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பொறியியல் மாணவர் சேர்க்கையில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் சேருவதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கவுன்சலிங்கின்போது, ரேங்கில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவர்கள் கிண்டி பொறியியல் கல்லூரியில் உள்ள படிப்புகளில் சேருவதில் ஆர்வம் காட்டுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டில் வழக்கத்துக்கு மாறாக, முதல் ரேங்க் பெற்ற மாணவர்களில் நான்கு பேர், கவுன்சலிங்கில் அரசு உதவி பெறும் கல்லூரியான பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்தனர். எனினும், மாணவர்களின் முதல் சாய்ஸ் கிண்டி பொறியியல் கல்லூரி என்பது தொடர்கிறது. அத்துடன், அந்தக் கல்லூரியில் தங்களது இரண்டாவது, மூன்றாவது விருப்பத்தில் உள்ள படிப்புகளில் இடம் கிடைத்தால் கூட போதும் என்று சேருவதில் மாற்றம் இல்லை.

முதல் நாளில் கவுன்சலிங்கிற்கு அழைக்கப்பட்ட 2,399 மாணவர்களில் 730 மாணவர்கள் கவுன்சலிங்கிற்கு வரவில்லை. 6 மாணவர்கள் கவுன்சலிங்கிற்கு வந்து விட்டு எந்தக் கல்லூரியையும் தேர்வு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம்.

மாணவர்களின் முதல் சாய்ஸ் வழக்கம் போல எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன். அதேசமயம், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதில் மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் ஆகிய பாடப்பிரிவுகளில் சேருவதிலும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முதல் நாளில் 436 மாணவர்கள் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் பாடப்பிரிவையும் 376 பேர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவையும் 271 பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவையும் 161 பேர் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவையும் 111 பேர் சிவில் பாடப்பிரிவையும் 109 பேர் ஐ.டி. பாடப்பிரிவையும் தேர்வு செய்தனர். எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் பாடப்பிரிவைத் தேர்வு செய்தவர்களில் அதிகம் பேர் மாணவிகள். அதாவது 271 மாணவிகள் இப்படிப்பைத் தேர்வு செய்தனர். இசிஇ படிப்பைத் தேர்வு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 165-தான். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவைத் தேர்வு செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்களே (367 மாணவர்கள்). கவுன்சலிங்கிற்கு வரும் மாணவர்களின் பலர், தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேருவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். சில மாணவர்கள், தாங்கள் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்காவிட்டாலும் விரும்பிய கல்லூரியில் தங்களது அடுத்த சாய்ஸை தேர்வு செய்கின்றனர்.

இந்த ஆண்டு மாணவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் 42 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களும் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் பாடப்பிரிவில் 41 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரில் 32 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களும் உள்ளன. அரசு ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கவுன்சலிங்கில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தாலும்கூட விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை  1.68 லட்சம்தான். எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைப்பதில் பிரச்சினை இருக்காது. ஆனால், அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் விரும்பிய பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்குமா என்பதுதான் பிரச்சினை. அதேசமயம்,  கவுன்சலிங்கின் முடிவில் காலி இடங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment