Wednesday, December 28, 2016

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு குறித்து மாணவர்களிடம் குழப்பம்

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஆன்-லைன் விண்ணப்பம் குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள சூழ்நிலையில், புதுச்சேரி அரசின் நிலைபாடு குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டும்.

எம்.பி.பி.எஸ்., மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, தேசிய அளவிலான நீட் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்த நுழைவுத் தேர்வு நடத்துவதில் இருந்து, மாநிலங்களுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததால் புதுச்சேரி மாநில மாணவர்கள் தப்பினர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

இருப்பினும் கடந்த பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரின், லோக்சபாவில், நீட் தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான மசோதாவை, சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா, தாக்கல் செய்தார். மசோதா. நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவின்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளும், வரும் கல்வி ஆண்டு முதல், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
அதன்படி, புதுச்சேரி மாநிலத்திலும் இந்தாண்டு நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்தாண்டு முதல் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில், சென்டாக் அரசு இட ஒதுக்கீட்டில் சேர, ’நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

நீட் தேர்வுக்கு, இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வெளியாக உள்ளது. ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் அதற்கான ஆயத்த பணிகளே இன்னும் துவக்கப்படவில்லை.

கடந்த முறை நீட் தேர்வு மாணவர் சேர்க்கையில் பல குழப்பங்கள் ஏற்பட்டது. நீட் முடிவுகள் வெளியாகி பல நாட்கள் கடந்து விட்ட போதிலும், புதுச்சேரி மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாக இடங்களுக்கான, மாணவர் சேர்க்கை முறை குறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

நீட் மாணவர் சேர்க்கை சம்பந்தமாக எந்த முடிவும் எடுக்க முடியாமல் சுகாதாரத் துறை திணறியது. குறைந்தபட்சம் தேர்ச்சி பட்டியலை கூட மத்திய அரசை அணுகி பெற இயலவில்லை. கடைசி வரை மாணவர் சேர்க்கையில் குழப்பமே நீடித்தது.

பிற மாநிலங்களில் தனியார் கல்லுாரிகளின் நிர்வாக இடங்களுக்கு ஒருங்கிணைந்த சேர்க்கை மையம் ஏற்படுத்தி, குளறுபடி இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லுாரிகளே விண்ணப்பத்தினை பெற்று, மாணவர் சேர்க்கை நடத்திய கூத்து நடந்தது. 

இதன் விளைவாக கல்வி கட்டணம் ரூ.25 லட்சம் வரை எகிறியது. நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. இது குறித்து ஜனாதிபதி, கவர்னர், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பல புகார்கள் பறந்துள்ளன.

எனவே, வரும் ஆண்டு முதல், மருத்துவக் கல்விக்கு கட்டாயமாக நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளதால், குளறுபடி இல்லாமல் தெளிவாக நீட் தேர்வு குறித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, நீட் தேர்வு குறித்து புதுச்சேரி அரசின் நிலைப்பாடு, மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராக வேண்டுமா என்பதையும் விரைவாக அமைச்சரவையில் முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

சமச்சீர் பாடத்தின் கீழ் புதுச்சேரி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுகின்றனர். நீட் தேர்வு சி.பி.எஸ்.இ.,பாடத்திட்டத்தின் கீழ் நடக்கிறது. புதுச்சேரியில் நீட் தேர்வின் நிலை குறித்து தெரிந்தால் தான், மாணவர்கள் முன்கூட்டியே தயாராக முடியும். எனவே, விரைவாக மாநில அரசு தனது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சென்டாக் கலைக்கப்படுமா?

புதுச்சேரி மாநிலத்தில் நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. 

இந்தாண்டு முதல் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதால், சென்டாக் அமைப்பு கலைக்கப்படுமா அல்லது சென்டாக் நீட் மாணவர் சேர்க்கை மையம் என பெயர் மாற்றம் பெறுமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment