புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், நடப்பு கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கான விவர குறிப்பேட்டில், புதிய திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதில், மாணவர்களின் பெற்றோர், மத்திய அரசு அல்லது மாநில அரசு ஊழியராக, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் புதுச்சேரியில் பணியாற்றி இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள், புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில், இரண்டு ஆண்டுகள் மேல்நிலை கல்வியை பெற்றிருக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து, நஷத் ஜினன், ஹிரித்யா ஹரிதாஸ், கோவிந்த் அசோக் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன் பிறப்பித்த உத்தரவு:
ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் உள்ள, 75 இடங்களில், 20 இடங்கள், புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீட்டை, உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
புதுச்சேரி மாநில ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு, கல்வி ஆலோசனைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment