Tuesday, May 2, 2017

முதுநிலை பல் மருத்துவக் கவுன்சிலிங் துவக்கம்

 அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில், சென்டாக் முதுநிலை பல் மருத்துவ கவுன்சிலிங் இன்று துவங்குகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லுாரி, மாகி பல் மருத்துவக் கல்லுாரி, இந்திராகாந்தி பல் மருத்துவக் கல்லுாரிகள் என, மூன்று கல்லுாரிகளில் முதுநிலை பல் மருத்துவ படிப்புகள் உள்ளன. 

இந்த முதுநிலை பல் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள இடங்களை அந்தந்த கல்லுாரிகளே நிரப்பிக் கொள்வது வழக்கம்.
இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவை தொடர்ந்து, இந்தாண்டு முதன் முறையாக சென்டாக் மூலம் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 

இதற்கான சென்டாக் கவுன்சிலிங் புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில் சென்டாக் அலுவலகத்தில் இன்று 2ம் தேதி துவங்குகிறது.

காலை 9.30 மணிக்கு நீட் ரேங்க் 0132 முதல் 3851 வரை, 11 மணிக்கு 4060 முதல் 10381 வரை எடுத்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. இந்த முறை அரசு மருத்துவக் கல்லுாரி மட்டுமின்றி, தனியார் கல்லுாரிகளிலும் இந்தாண்டு முதல் முறையாக 50 சதவீத இடம் அரசுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசு கல்லுாரியான மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லுாரியில் மொத்தமுள்ள 13 இடங்களில் 6 சீட்டுகள் சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது. ஒரு சீட் என்.ஆர்.ஐ.,க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 6 சீட்டுகள் அகில இந்திய ஒதுக்கீடாக உள்ளது.

தனியார் பல் மருத்துவக் கல்லுாரியை பொறுத்தவரை, மாகி பல் மருத்துவக் கல்லுாரியில் மொத்தமுள்ள 18 சீட்டுகளில் 8 சீட்டுகள், இந்திராகாந்தி பல் மருத்துவக் கல்லுாரியில் மொத்தமுள்ள 24 சீட்டுகளில் 12 சீட்டுகள் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக, 53 இடங்களில் 26 பல் மருத்துவ சீட்டுகள் சென்டாக் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளது. இட ஒதுக்கீடு வாரியாக பொது பிரிவு-16, ஓ.பி.சி.,-2, எம்.பி.சி.,-4, எஸ்.சி.,-4 என நிரப்பப்பட உள்ளது. 

கவுன்சிலிங்கிற்கு வரும் மருத்துவ மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களை அவசியம் கொண்டு வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment