Sunday, June 25, 2017

‘நீட்’ எழுதியதில் 6.11 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி

நாடு முழுவதும், 778 கல்லூரிகளில், 81 ஆயிரம் மருத்துவ படிப்பு இடங்களுக்கான, ’நீட்’ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதியதில், 6.11 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; தேர்ச்சி சதவீதம் 56. ‘டாப்பர்ஸ்’ பட்டியலில், தமிழகத்தை தவிர, பிற தென் மாநில மாணவர்களே இடம் பிடித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள, 470 மருத்துவ கல்லூரிகளில், 65 ஆயிரத்து 170 எம்.பி.பி.எஸ்., மற்றும் 308 பல் மருத்துவ கல்லூரிகளில், 25 ஆயிரத்து 730 பி.டி.எஸ்., இடங்கள் என, 778 கல்லூரிகளில், 81 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றுக்கான மாணவர்கள் சேர்க்கையை, தேசிய தகுதி நுழைவுத் தேர்வான, ’நீட்’ அடிப்படையிலேயே நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனால், ’நீட்’ தேர்வு, மே 7ல் நடந்தது. நாடு முழுவதும், 10 லட்சத்து 90 ஆயிரத்து 85 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது. தேர்வு எழுதியோரில், 56 சதவீதம் பேர், அதாவது, ஆறு லட்சத்து, 11 ஆயிரத்து 539 பேர் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில், 3.45 லட்சம் பேர் மாணவியர்; ஐந்து திருநங்கையரும் இடம் பெற்றுள்ளனர். தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, 11 மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தேசிய அளவில், அதிக மதிப்பெண் பெற்ற முதல், 25 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த, நவ்தீப் சிங் என்ற மாணவர், மொத்த மதிப்பெண்ணான 720க்கு, 697 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் முதலி டம் பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாணவர்கள் அர்சித் குப்தா, மணீஷ் முல்சந்தானி ஆகியோர், 695 மதிப்பெண் பெற்று, இரண்டு, மூன்றாம் இடங்களை பிடித்துள்ளனர்.
முதல் 25 இடங்களில், தென் மாநிலங்களில், தமிழகம் மற்றும் புதுச்சேரி தவிர, பிற மாநிலத்தினர் இடம் பிடித்துள்ளனர். அதிலும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநில மாணவர்களே, அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இந்த தேர்வில், முன்னேறிய வகுப்பினருக்கு, 131 மதிப்பெண்களும், இட ஒதுக்கீடு இல்லாத பிரிவினர் மற்றும், முன்னேறிய பிரிவில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு, 118 மதிப்பெண்களும், மற்ற மாணவர்களுக்கு, 107 மதிப்பெண்களும் தேர்ச்சி மதிப்பெண்ணாக கணக்கிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment