Saturday, June 14, 2014

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியலில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ 132 மாணவர்கள் எடுத்து இந்த ஆண்டு இடம்பெற்றுள்ளனர்.
கடந்த கல்வி ஆண்டில் (2013-14) எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ 7 மாணவர்களும், 2012-13-ஆம் கல்வி ஆண்டில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ 17 மாணவர்களும் மட்டுமே பெற்றிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ 132 மாணவர்கள் பெற்றுள்ளதையடுத்து, எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர ஆர்வத்துடன் காத்திருக்கும் மாணவர்களுக்கு இடையே கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி உறுதியாகியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தரவரிசைப் பட்டியலை சனிக்கிழமை (ஜூன் 14) வெளியிட்டார். சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி, மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஆர்.ஜி.சுகுமார் ஆகியோர் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியல் குறித்து அளித்த தகவல்கள்:-
முதல் 10 மாணவர்கள்: கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 எடுத்துள்ள 132 பேரில் (69 பேர் மாணவர்கள், 63 பேர் மாணவிகள்) தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கணிதம்-இயற்பியல்-வேதியியல்-உயிரியல் ஆகிய பாடங்கள் அனைத்திலும் 200-க்கு 200 பெற்றுள்ள 132 மாணவர்களில், 76 பேர் பிறந்த தேதி, ரேண்டம் எண் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக 132 மாணவர்களில் 15 மாணவர்கள் ரேண்டம் எண் அடிப்படையில் (கடந்த ஆண்டு 11 பேருக்கு ரேண்டம் எண் பயன்படுத்தப்பட்டது.) வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவர் கே.சுந்தர் நடேஷ் உள்பட 10 பேர் முதல் 10 இடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
நாமக்கல் பள்ளி சாதனை: எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் சென்னை கோபாலபுரம் டிஏவி மேல்நிலைப் பள்ளி மாணவர் கே.சுந்தர் நடேஷ், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.அபிஷேக், ஈரோடு பாரதி வி.பவன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் வி.எஸ்.விஜயராம், நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.மிதுன், நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஈ.ஸ்ருதி, நாமக்கல் கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.நிவேதா, ஈரோடு அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ஆர்.மைதிலி, நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஈ.கரோலின் திவ்யா, நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முதல் தலைமுறை (குடும்பத்தில் முதல் பட்டதாரி) மாணவர் வி.கௌதம், நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.மைவிழி ஸ்ருதி ஆகியோர் 200-க்கு 200 பெற்று முதல் 10 இடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விகிதம் 42 சதவீதம்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 27,539 மாணவர்களில், 1,402 பேர் மட்டுமே முற்பட்ட வகுப்பை (எஃப்ஓசி) பிரிவைச் சேர்ந்தவர்கள்; 11,616 மாணவர்கள், அதாவது 42 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 1,427 மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 5,944 மாணவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 6,031 மாணவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 903 மாணவர்கள் தாழ்த்தப்பட்ட (அருந்ததியினர்) வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 216 மாணவர்கள் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
10,061 முதல் தலைமுறை மாணவர்கள்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்து தகுதியுள்ள 27,539 விண்ணப்பங்களில், 10,061 பேர் முதல் தலைமுறையை (குடும்பத்தில் முதல் பட்டதாரிகள்) பிரிவைச் சேர்ந்தவர்கள். கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ பெற்றுள்ள 132 மாணவர்களில், 19 பேர் முதல் தலைமுறை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையதளத்தில்...: சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment