புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல்முறையாக ஆன்லைன் முறையில் நடைபெற்ற இத்தேர்வை 58 ஆயிரம் பேர் எழுதினர்.
புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் 150 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் 12.30 மணி வரை நடந்தது. அகில இந்திய மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு அடிப்படையில் இத்தேர்வு நடந்தது.
நாடு முழுவதும் புதுச்சேரி, சென்னை, புதுதில்லி, கோவை, திருச்சி, நாமக்கல், கொல்கத்தா, சேலம், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், விஜயவாடா உள்பட 36 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 376 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடந்தது. இத்தேர்வை 58 ஆயிரம் பேர் எழுதினர். இத்தேர்வுக்கு 93 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இது கடந்தாண்டு எண்ணிக்கையை விட 35 சதவீதம் அதிகம். புதுச்சேரியில் ஜிப்மர் வளாகத்தில் 4 மையங்கள் உள்பட மொத்தம் 13 மையங்களில் நுழைவுத் தேர்வு நடந்தது.
இயற்பியல், வேதியியல், உயிரியல் தலா 60 மதிப்பெண்களும், ஆங்கிலம் 20 மதிப்பெண்களும் என மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது.
ஆள்மாறாட்டத்தைத் தடுக்க பயோமெட்ரிக் அடையாள அட்டையை ஜிப்மர் நிர்வாகம் வழங்கியிருந்தது. உரிய சோதனைக்குப்பின் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களில் கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன.
இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் 16-ஆம் தேதி இணைய தளம் மூலம் வெளியிடப்படும் என்று ஜிப்மர் வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment