எம்.பி.பி.எஸ். தர வரிசைப் பட்டியலில் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த ஊத்தங்கரை சாதனை மாணவி எஸ்.சுஷாந்திக்கு 191-வது இடம் கிடைத்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் தமிழ் அல்லது மொழி, ஆங்கில பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் எம்.பி.பி.எஸ்.-பி.இ. படிப்பில் சேர உயிரியல்-இயற்பியல்-வேதியியல்-கணித பாடங்களுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை மாணவர்கள் அளித்துள்ளனர்.
சென்னையில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 பெற்ற 132 மாணவர்களில், உயிரியல்-இயற்பியல்-வேதியியல்-கணிதம் ஆகிய நான்கிலும் 200-க்கு 200 பெற்று முதல் 10 இடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களின் பிளஸ் 2 மொத்த மதிப்பெண்ணே இதற்குச் சான்றாகும். இவர்கள் பிளஸ் 2 தேர்வில் ரேங்க் எடுத்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் பின்னுக்குத் தள்ளியுள்ளனர்.
எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு மொத்த மதிப்பெண் விவரம்:-
சென்னை கோபாலபுரம் டிஏவி மேல்நிலைப் பள்ளி மாணவர் கே.சுந்தர் நடேஷ்-மொத்த மதிப்பெண் 1167; கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.அபிஷேக்-1171; ஈரோடு பாரதி வி.பவன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் வி.எஸ்.விஜயராம்-1178; நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.மிதுன்-1185; நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஈ.ஸ்ருதி-1189; நாமக்கல் கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.நிவேதா-1186; ஈரோடு அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ஆர்.மைதிலி-1176; நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஈ.கரோலின் திவ்யா-1181; நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முதல் தலைமுறை (குடும்பத்தில் முதல் பட்டதாரி) மாணவர் வி.கௌதம்-1179; நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.மைவிழி ஸ்ருதி-1177. இவர்களில் மாணவி ஈ.ஸ்ருதி மட்டும் பிரெஞ்சு பாடத்தை மொழி பாடமாக எடுத்துப் படித்தவர்.
பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டபோது, மாநிலத்தில் முதலிடம் பிடித்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி எஸ்.சுஷாந்தி எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் 191-ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளார். பிளஸ் 2 தேர்வில் இவரது மொத்த மதிப்பெண் 1200-க்கு 1193. இயற்பியல், உயிரியல் பாடங்களில் இவர் 200-க்கு 200 பெற்ற போதிலும், வேதியியல் பாடத்தில் 200-க்கு 199 பெற்றதால் இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 199.75. இதனால் இவர் தரவரிசைப் பட்டியலில் 191-ஆவது இடத்தில் உள்ளார்.
இதே போன்று இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 1,200-க்கு 1,192 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்த தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.எல்.அலமேலு, எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் 338-ஆவது இடத்தில் உள்ளார். இவர் இயற்பியல்-வேதியியல் பாடங்களில் 200-க்கு 200 பெற்றிருந்தாலும்கூட, உயிரியல் பாடத்தில் 200-க்கு 199 பெற்றதால் கட்-ஆஃப் மதிப்பெண் 199.50-ஆக நிர்ணயிக்கப்பட்டு 338-வது இடத்தில் இடம்பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1191 பெற்று மாநிலத்தில் 3-ஆம் பிடித்த நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் டி.துளசிராஜன், எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் 84-ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளார். உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகிய மூன்று பாடங்களில் 200-க்கு 200 பெற்றிருந்தாலும், பிறந்த தேதி மற்றும் ரேண்டம் எண் அடிப்படையில் இவருக்கு 84-வது இடம்தான் கிடைத்துள்ளது.
நள்ளிரவில் வந்த மதிப்பெண் சி.டி.!
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய உயிரியல்-வேதியியல்-இயற்பியல் பாடங்களில் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் சி.டி.-ஐ மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) நள்ளிரவு அளித்தனர்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்து தகுதி பெற்றுள்ள 27,539 பேரில், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்த 900 மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய சி.டி.-ஐ மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகளிடம் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ரேங்க் பட்டியலை முழுமைப்படுத்தும் பணி சனிக்கிழமை அதிகாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
மறு மதிப்பீடு மூலம் திருத்தப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் இரண்டு மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ பெற்றதால், 200-க்கு 200-ஐப் பெற்றோரின் எண்ணிக்கை 130-லிருந்து 132-ஆக அதிகரித்தது. இதே போன்று எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ள 100 மாணவர்களுக்கு மதிப்பெண் அதிகரித்து மறு மதிப்பீடு மூலம் பலன் கிடைத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்: இதே போன்று பி.இ. படிப்புக்கு உரிய கணிதம்-இயற்பியல்-வேதியியல் ஆகிய பாடங்களில் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் அடங்கிய சி.டி.-ஐ அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் குழு அதிகாரிகளிடம் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அளிப்பார்கள் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment