திட்டமிட்டபடி, நேற்று நடந்த, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வில், தமிழகத்தில், 26 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்து வருகிறது. மத்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அகில இந்திய அளவில்,பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், மாநில இடங்களுக்கும் சேர்த்து, மே, 1 மற்றும் ஜூலை, 24ல் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., ஏற்கனவே அறிவித்தபடி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித் தோருக்கு, நேற்று, பொது நுழைவுத் தேர்வை நடத்தியது. தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட, 39மையங்களில் நடந்ததேர்வில், 26 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
தேர்வு மையங்களில், பேனா தரப்பட்டது. வெளியில் இருந்து, தண்ணீர் பாட்டில், பேனா,கால்கு லேட்டர் என, எந்த பொருட்களும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. கம்மல், மூக்குத்தி, வளையலுக்கு அனுமதி இல்லை என்பதால், மாணவியர் அவற்றை தங்கள் பெற்றோரிடம் கழற்றிக் கொடுத்து சென்றனர்.
டி.எம்.இ., அலுவலகம் முற்றுகை: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, அகில இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்புதெரிவித்து, சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தினர், சென்னையில் உள்ள, டி.எம்.இ., அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து, சங்க பொதுச் செயலர் ரவீந்தரநாத் கூறியதாவது:
தமிழக அரசின், 2006 சட்டத்தின் மூலம், பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கு, ஜனாபதி ஒப்புதல் பெறப்பட்டு, சட்ட ரீதியான பாதுகாப்பும் உள்ளது.
தேசிய அளவில் நுழைவுத் தேர்வு கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் கூறுவது, மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. தமிழக மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்க, போர்க்கால அடிப்படையில், மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment