Tuesday, June 30, 2015

இன்ஜி., மாணவர்களுக்கு முதல் இரண்டு வாரங்களுக்கு பிளஸ் 1 பாடம்


'இன்ஜினியரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, முதல் இரண்டு வாரங்களுக்கு, பிளஸ் 1 பாடங்களை நடத்த வேண்டும்' என, கல்லுாரி பேராசிரியர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது.
பள்ளிப்படிப்பை முடித்து, புதிதாக பொறியியல் கல்லுாரிகளுக்கு வரும் மாணவர்களுக்கு, எப்படி பாடம் நடத்த வேண்டும்; அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து, பேராசிரியர்களுக்கு, அண்ணா பல்கலையில், 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற. முன் தயாரிப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 590 கல்லுாரிகளின், 2,000 பேராசிரியர் பங்கேற்றுள்ளனர். அப்போது, 'புதிதாக இன்ஜினியரிங் படிக்க வரும் மாணவர்களுக்கு, அடிப்படை கணித, இயற்பியல், வேதியியல் பாடங்கள் சரியாக தெரியவில்லை' என, பேராசிரியர்கள் பலர் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அண்ணா பல்கலை பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு முடித்து, மேல்நிலை பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர், பிளஸ் 1 வகுப்பை பெயரளவிலோ அல்லது தேர்ச்சிக்காக மட்டுமோ படித்து விட்டு, இரண்டு ஆண்டுகளும், பிளஸ் 2 பாடங்களையே படிக்கின்றனர். இதனால், இன்ஜினியரிங் வந்த பின், தடுமாறுகின்றனர்.
இன்ஜினியரிங் படிப்பில், முதல் ஆண்டில், பிளஸ் 1 பாடங்கள் அடிப்படையிலேயே, அதிக பாடங்கள் இருக்கும். பிளஸ் 1 படிப்பு இன்ஜினியரிங்குக்கு மிக முக்கியம். அதை சரியாகப் படிக்காமல் வருவதால், முதல் செமஸ்டரிலேயே தேர்ச்சி அடையாத சூழல் உள்ளது.
எனவே, இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, முதல் இரண்டு வாரங்களுக்கு, பிளஸ் 1 பாடம் நடத்த அறிவுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நாளை பொது கவுன்சிலிங் துவக்கம்அண்ணா பல்கலையின் இன்ஜி., மாணவர் சேர்க்கை விளையாட்டுப் பிரிவு கவுன்சிலிங், நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து, மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நேற்று நடந்தது. இதில், மொத்தமுள்ள, 3 சதவீத ஒதுக்கீடான, 5,137 இடங்களுக்கு, 219 பேர் அழைக்கப்பட்டனர்; 163 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
நேற்று மாலை, 7:00 மணியுடன், இந்த கவுன்சிலிங் முடிந்தது. இந்த பிரிவில் மீதமுள்ள, 5,000 இடங்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்படும். பொதுப்பிரிவு கவுன்சிலிங், நாளை துவங்குகிறது; வரும், 28ம் தேதி முடிகிறது.

Saturday, June 27, 2015

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை துவக்கம்:இன்று'சிவில்' படிப்பு

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை துவக்கம்:இன்று'சிவில்' படிப்பு
பி.எஸ்சி., பாலிடெக்னிக் முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேருவதற்கான 'கவுன்சிலிங்' காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியில் நேற்று தொடங்கியது. ஒரு லட்சத்து 11 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 19 ஆயிரத்து 629 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. 91 ஆயிரத்து 371 இடங்கள் காலியாக உள்ளன.
இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, அழைப்பு கடிதம், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. முதல் நாளான நேற்று காலை 9 மணிக்கு விளையாட்டு வீரர்களுக்கும், 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும், மாலை நான்கு மணிக்கு 'கெமிக்கல்', 'லெதர்', 'பிரிண்டிங்' பிரிவுகளை எடுக்கும் மாணவர்களுக்கான 'கவுன்சிலிங்' நடந்தது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 993 இடங்களுக்கு 50 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்தனர். இவர்களில் 44 பேர் பங்கேற்றனர். முன்னாள் ராணுவவீரர் வாரிசுதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 30 இடங்களில் 23 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 இடங்களுக்கு, 16 மாணவர்கள் பங்கேற்றனர். 'பிரிண்டிங்' பிரிவில் 4 இடங்களுக்கு 2 பேரும், 'கெமிக்கல்' பிரிவில் 125 இடங்களுக்கு 100 பேரும், 'லெதர்' பிரிவில் மூன்று பேரும் பங்கேற்று, சேர்க்கை கடிதம் பெற்றனர். இன்று பொதுப்பிரிவான சிவிலுக்கும், 30-ம் தேதி மெக்கானிக்கல், ஜூலை 5-ம் தேதி எலக்ட்ரிக்கல் பிரிவுக்கும் 'கவுன்சிலிங்' நடக்கிறது. 9-ம் தேதி பிளஸ் 2-வில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து படித்த, பி.எஸ்சி., மாணவர்களுக்கும் 'கவுன்சிலிங்' நடக்கிறது. ஏற்பாடுகளை நேரடி சேர்க்கை செயலாளர் மாலா, ஒருங்கிணைப்பாளர் கணேசன் செய்திருந்தனர்

Wednesday, June 24, 2015

அரசு எம்.பி.பி.எஸ்.; 1,672 மாணவர்கள் தேர்வு: காத்திருப்போர் பட்டியலில் 313 மாணவர்கள்


சென்னையில் நடைபெற்று வரும் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர கடந்த 5 நாள்களில் மொத்தம் 1,672 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப, ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி முதல் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கு முதல் கட்டக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 25) நிறைவடைகிறது.
வேகமாக நிரம்பும் அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்துப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய அனைத்து எம்.பி.பி.எஸ். இடங்களும் கடந்த 5 நாள்களில் நிரம்பி விட்டன.
சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி), அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் அனைத்துப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) பிரிவு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன.
காத்திருப்போர் பட்டியல்: கலந்தாய்வின் 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை, கட்-ஆஃப் மதிப்பெண் 197.00-இல் தொடங்கி 196.50 வரை எடுத்திருந்த மொத்தம் 656 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். கலந்தாய்வுக்கு 47 மாணவர்கள் வரவில்லை; இதையடுத்து கலந்தாய்வில் பங்கேற்ற 599 மாணவர்களில், 125 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களை 180 மாணவர்கள் தேர்வு செய்தனர்.
சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரி பி.டி.எஸ். இடங்களை 33 மாணவர்கள் தேர்வு செய்தனர். உயர் நீதிமன்ற வழக்கு காரணமாக எந்த மாணவருக்கும் சேர்க்கைக் கடிதம் வழங்கப்படவில்லை.
தாங்கள் விரும்பிய அரசு மருத்துவக் கல்லூயில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்காத 261 மாணவர்கள் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 313 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தொடரும் கலந்தாய்வு: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 585 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 253 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 36 பி.டி.எஸ். காலியிடங்களை நிரப்ப தொடர்ந்து புதன்கிழமை (ஜூன் 24) கலந்தாய்வு நடைபெற உள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம் வகுப்பினர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என கட்-ஆஃப் மதிப்பெண் 196.50-இல் தொடங்கி கட்-ஆஃப் மதிப்பெண் 192.00 வரை எடுத்துள்ள மாணவர்கள் புதன்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்கின்றனர்.
345 பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு
சென்னையில் நடைபெற்று வரும் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில், கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த 345 பழைய மாணவர்கள் இதுவரை தேர்வாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால், கலந்தாய்வில் தினமும் பழைய மாணவர்கள் குறித்த எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது.
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 23) 84 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; கடந்த 5 நாள்களில் மொத்தம் 345 பழைய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 4,679 மாணவர்களில், 548 பழைய மாணவர்களுக்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கணித்துள்ளனர். தொடர்ந்து புதன்கிழமை (ஜூன் 24), வியாழக்கிழமை (ஜூன் 25) ஆகிய இரண்டு நாள்கள் கலந்தாய்வு நடைùபெற உள்ளது

Sunday, June 21, 2015

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு: நெய்வேலி பள்ளி மாணவர்கள் 21 பேர் தேர்ச்சி


இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் (ஐ.ஐ.டி.) பயில்வதற்கான ஐ.ஐ.டி.- ஜே.இ.இ. தேர்வில், நெய்வேலி ஜவகர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 21 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனமும், தெலுங்கு கலா சமிதியும் இணைந்து மத்திய பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் ஜவகர் சி.பி.எஸ்.இ. பள்ளியை நடத்தி வருகின்றன. இப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுக்கு ஒருங்கிணைந்த முறையில் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இதன்மூலம் ஒவ்வோர் ஆண்டும் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பல்வேறு இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் பயில இடம் பெறுகின்றனர்.
தமிழகத்தில் முதலிடம்: இப்பள்ளியில் 2007-ஆம் ஆண்டு முதல் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்து வெளியேறிய மொத்த மாணவர்கள் 355 பேரில் 284 பேர் ஐ.ஐ.டி, என்.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்களில் பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள எந்த ஒரு பள்ளியும் இதுபோன்ற சாதனையை செய்ததில்லை.
சிறப்பு நிபுணர்கள்: ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்குப் பயிற்றுவிக்கும் சிறப்பு அனுபவம் மிக்க ஆசிரியர்கள் இந்தப் பள்ளியில் பணியாற்றுகின்றனர். புதுதில்லி, விஜயவாடா, கோட்டா, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலிருந்து ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்கான நிபுணர்கள் வந்து பயிற்சி அளிக்கின்றனர். மேலும், இப்பள்ளி மாணவர்கள், தங்களது பாடம் சார்ந்த சந்தேகங்களை காணொலிக் காட்சி மூலம், நாட்டின் தலைசிறந்த நிபுணர்களுடன் உரையாடி விளக்கம் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இங்கு பிரபல கல்வி நிறுவனங்கள் வழங்கும் பாடக்குறிப்புகள் பயன்படுத்தப்படுவதுடன், நுழைவுத் தேர்வுக்கு முந்தைய நிலையில், மாணவர்களுக்கு புத்துணர்வு வழங்கும் வகையில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் நிபுணர்களைக் கொண்டு இறுதிக்கட்ட அதிவிரைவு திருப்புதல் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
இரண்டு கட்டத்தேர்வு: ஐ.ஐ.டி.யில் மாணவர்களைத் தேர்வு செய்ய இரண்டு கட்ட தேர்வுமுறை கடந்த ஆண்டு முதல் அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த ஆண்டுக்கான முதல் நிலைத்தேர்வு 4.4.2015-ல் நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 15 லட்சம் மாணவர்கள் கலந்துகொள்ள, சுமார் 1.50 லட்சம் மாணவர்கள் தேர்வுபெற்றனர்.
இதில், நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவர்கள் 68 பேர் தேர்வு எழுதினர். 51 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இறுதிக்கட்டத் தேர்வு மே 24-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவர்கள் 21 பேர் வெற்றிபெற்று ஐ.ஐ.டி.யில் பயிலத் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் 5:2 என்ற சதவிகிதத்தில் தேர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராட்டு விழா: ஐ.ஐ.டி.யில் பயில தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நெய்வேலி, தெலுங்கு கலா சமிதியில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற என்.எல்.சி. தலைவர் பி.சுரேந்திரமோகன், தகுதி பெற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டினார்.
மேலும், ஜவகர் பள்ளியின் முதல்வர் என்.யசோதா, துணை முதல்வர் எம்.சேதுமணி, ஆசிரியர்கள், நெய்வேலி தெலுங்கு கலா சமிதியின் பொறுப்பாளர்கள், மாணவர்களுக்கு காணொலிக்காட்சி வசதி செய்து தரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த "ஆல்டிட்யூட் கிளாஸஸ்' நிறுவனத்தின் பிரதிநிதி சந்திரசேகர் ஆகியோரையும் பி.சுரேந்திரமோகன் பாராட்டினார்.

கல்வி உதவித்தொகை நிலுவை : திணறும் இன்ஜி., கல்லூரிகள்


இன்ஜி.,கல்லுாரி மாணவர்களுக்கு தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை வழங்க தாமதம் ஆவதால், தனியார் கல்லுாரிகள் திணறி வருகின்றன.தமிழகம் முழுவதும் 573 இன்ஜி., கல்லுாரிகள் உள்ளன. ஒவ்வொரு கல்லுாரியிலும் 30 சதவீதம் என்ற அளவில், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு 70 ஆயிரமும் கல்வி உதவித்தொகையாக தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் பரிந்துரையின் பேரில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்படுகிறது. எம்.இ., படிப்புக்கு செமஸ்டருக்கு ரூ.25 முதல் 30 ஆயிரம் வரையும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையும் வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், கல்வி கட்டணம், அந்த ஆண்டின் மார்ச்அல்லது ஏப்ரல் இறுதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கு செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த மே மாத கடைசி வாரத்தில், மொத்த தொகையில் 30 சதவீதமே வழங்கப்பட்டது. மீதி 70 சதவீதம் என்ற அடிப்படையில், ஒவ்வொரு கல்லுாரிக்கும் ரூ.50 லட்சம் முதல் ரூ.ஒரு கோடி வரை நிலுவை உள்ளது.
இந்த தொகையை எதிர்பார்த்தே கல்லுாரிகள், வங்கியில் கடன் பெற்று உள்ளன. கடன் தொகையை செலுத்த, வங்கிகள் கல்லுாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியாமலும், ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமலும் தனியார் கல்லுாரிகள் திணறி வருகின்றன

BE - 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண் எடுத்து அசத்திய, அரசு பள்ளி மாணவர்


இன்ஜினியரிங் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகம், நேற்று வெளியிட்டது. இதில், 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண் எடுத்து அசத்திய, அரசு பள்ளி மாணவர்
இன்ஜினியரிங் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகம், நேற்று வெளியிட்டது. இதில், 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண் எடுத்து அசத்திய, 23 பேரில் ஒருவர், அரசு பள்ளி மாணவர். எட்டு பேர், மருத்துவ தர வரிசைப் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளனர்.
அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங்குக்கான பிளஸ் 2 மதிப்பெண், 'கட் - ஆப்' அடிப்படையிலான, தரவரிசைப் பட்டியலை, உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா நேற்று வெளியிட்டார். பட்டியலில், 23 பேர், 200க்கு 200 'கட் - ஆப்' எடுத்துள்ளனர். இவர்களில், 15 பேரின் பெயர் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன.
*குமாரபாளையத்தைச் சேர்ந்த விஷ்ணு என்ற மாணவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். இவர் தொழிற்கல்வி மாணவர்களின் தர வரிசைப் பட்டியலில், இரண்டாம் இடம்; பிற்படுத்தப்பட்டோர் மாணவர் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.
* தர வரிசையில், கோவை, சூலுாரைச் சேர்ந்த கீர்த்திபாலன், முதலிடம் பெற்றுள்ளார். இவர், திருச்செங்கோடு வித்ய விகாஸ் பள்ளி மாணவர்.
*சாதனை நிகழ்த்திய நிஷாந்த் ராஜன், முகேஷ் கண்ணன், நிவாஷ், சரவணக்குமார், பிரவின்குமார், மோனிஷ், மோகன்குமார் மற்றும் ராம் அஸ்வந்த் ஆகிய எட்டு பேர் மருத்துவ தர வரிசை பட்டியலிலும் முதலிடம் பெற்றுள்ளனர்; மருத்துவம் படிக்க உள்ளனர்.
*அவினாசி வெள்ளத் தோட்டத்தைச் சேர்ந்த கிரிதரன், ஈரோடு குருகுலம் பள்ளி மாணவர்.
*ஈரோடு மாவட்டம் ஏலவாமலையைச் சேர்ந்த விக்னேஷ்வரன், திருச்செங்கோட்டைச் சேர்ந்த கார்த்திக் ராஜா ஆகியோர், அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளி மாணவர்கள்.
*மதுரை பி அண்ட் டி நகரைச் சேர்ந்த மாணவர் சுகைல் அகமது, 199.75 'கட் - ஆப்' எடுத்து, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் இனப் பிரிவிலும்; சேலம் ஆத்துாரைச் சேர்ந்த இசைப்பிரியா, 199.25 எடுத்து, ஆதிதிராவிட அருந்ததியர் பிரிவிலும்; கொல்லிமலையைச் சேர்ந்த தனசேகர், 197.50 எடுத்து, பழங்குடியினர் பிரிவிலும் முதலிடம் பெற்றுள்ளனர்.
*தொழிற்கல்விப் பிரிவில், கோவை காராமடையைச் சேர்ந்த மனோஜ், முதலிடம் பிடித்துள்ளார். ஈரோடு, சிக்கரசம் பாளையம் தினேஷ் குமார்; திண்டுக்கல்லைச் சேர்ந்த ரோகிந்த் போஸ் ஆகியோர் முறையே, மூன்று, நான்காம் இடங்களை பெற்றுள்ளனர்.
முழுமையான தர வரிசைப் பட்டியல், அண்ணா பல்கலை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இன்ஜி., படிப்புக்கு மாணவியர் 'குட்பை':
இன்ஜி., படிப்புக்கு விண்ணப்பித்துள்ள, 1.50 லட்சம் பேரில், 57,990 பேர் மாணவியர். ஆனால், இந்த ஆண்டு தர வரிசைக்கான முதலிடம்பட்டியலில், மாணவியர் மிக சொற்பமாகவே இடம் பிடித்துள்ளனர்.
இதுகுறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:இந்த ஆண்டு பிளஸ் 2வில், உயிரியல் வினாத்தாள் கடினமாக இருந்ததால், அந்தப் பாடத்தில், 'சென்டம்' எண்ணிக்கை கடுமையாகக் குறைந்தது.அதனால், 'கட்- ஆப்' மதிப்பெண்ணும் குறைந்து விட்டது. கணிதம், பயாலஜி படித்த மாணவியரில், 195 முதல், 200 வரை, 'கட் - ஆப்' பெற்றவர்கள் மருத்துவம் நிச்சயம் கிடைக்கும் என்று அதற்கு மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதனால், இன்ஜினியரிங் பட்டியலில் அவர்கள் இடம் பெறவில்லை.அதேநேரம், இந்த ஆண்டு இன்ஜி., படிப்பில், 190க்குக் கீழ் அதிக மாணவர்கள், 'கட் - ஆப்' பெற்றுள்ளதால், பாடப்பிரிவு மற்றும் கல்லுாரித் தேர்வில் கடும் போட்டி இருக்கும்.இந்த ஆண்டு, 22,500 பேர், 190 'கட் - ஆப்' பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, 21,280 பேர் பெற்றனர்.இந்த ஆண்டு, 28,129 பேர், 188 'கட் - ஆப்' பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, 26,300 பேர் தான் பெற்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
"
மாணவர்களின், 'கட் - ஆப்' மதிப்பெண் ஒரே மாதிரியாக இருக்கும் போது, அவர்களை
வரிசைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கலைப் போக்க, 'ரேண்டம்' எண் பயன்படுத்தப்படும். கடந்த ஆண்டு, 124 பேருக்கு ரேண்டம் எண் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு, 80 பேருக்கு 'ரேண்டம்' எண் பயன்படுத்தப்படும்
ரைமண்ட் உத்தரியராஜ்
தமிழ்நாடு இன்ஜினியரிங்
மாணவர் சேர்க்கை செயலர்
இன்ஜினியரிங் தர வரிசைப் பட்டியலில், முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு வயது முதலே, இயந்திரங்களின் செயல்பாடு மீது, அதிக ஆர்வம் இருந்ததால், மெக்கானிக்கல் பிரிவில் படிக்க திட்டமிட்டுள்ளேன். இதற்கு காரணமான, நான் படித்த உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியை சாருமதிக்கு நன்றி கூற விரும்புகிறேன்

Saturday, June 13, 2015

என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது; மாணவர்கள், பெற்றோர்கள் நிற்க பந்தல் அமைக்கும் பணி தீவிரம்


என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நிற்க பந்தல்கள் அமைக்கும் பணி தீவிரமாக உள்ளது.
என்ஜினீயரிங் கலந்தாய்வு
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 538 உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பி.இ., பி.டெக். படிப்பில் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் வருடந்தோறும் கலந்தாய்வை நடத்தி வருகிறது.
இந்த கலந்தாய்வு ஒரு மாதத்திற்கும் மேலாக திருவிழா போல நடக்கும். மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து மகிழ்ச்சியாக என்ஜினீயரிங் இடங் களை தேர்ந்து எடுத்துச்செல்வார்கள்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 1 லட்சத்து 80 ஆயிரம் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு அவர்களின் விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்ததா? என்று பார்க்கும் வசதி அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ரேண்டம் எண்
மேலும் ரேண்டம் எண் 15-ந் தேதியும், ரேங்க் பட்டியல் 19-ந் தேதியும் வெளியிடப்பட உள்ளது.
ரேங்க் பட்டியலில் இடம் பெற்றவர்களின் விண்ணப்பம் தான் தகுதியானவை ஆகும்.
விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு 28-ந் தேதியும், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு 29-ந் தேதியும் நடைபெற உள்ளது.
பொது கலந்தாய்வு 1-ந் தேதி தொடங்குகிறது
மாணவ-மாணவிகளுக்கான பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த கலந்தாய்வில்தான் பெரும்பாலான மாணவ- மாணவிகள் கலந்து கொள்வார்கள். இந்த கலந்தாய்வு ஜூலை 31-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தலைமையில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் செய்து வருகிறார்.
கலந்தாய்வு ஏற்பாடு குறித்து பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:-
பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் அல்லது உறவினர்கள் கலந்தாய்வு நடைபெறுவதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருகிறார்கள். அவர்கள் எந்த கல்லூரியை தேர்ந்து எடுக்கலாம். எந்த கல்லூரியில் இடம் உள்ளது என்ற விவரம் ஆயிரம் பேர் உட்காரக்கூடிய இடத்தில் திரையில் தெரிவிக்கப்படுகிறது. அந்த இடம் பெரிய கூடாரம் போல அமைக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் குடிநீர் வசதி, மின்விசிறிகள் ஆகியவை செய்யப்பட்டு இருக்கும்.
மேலும் கழிப்பிட வசதி போதுமான அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் வரிசையில் நிற்பதற்கு வசதியாக பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவை அனைத்தும் கலந்தாய்வுக்கு முன்பாக முடிந்துவிடும்.
மாணவ-மாணவிகளுக்கு எந்த வித குறைவும் இல்லாமல் இருக்க கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Friday, June 12, 2015

MBBS "ரேண்டம் எண்" என்றால் என்ன ? எப்போது பயன்படுத்தப்படும்?


எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை தயாரிக்கும்போது ஒரே கட்-ஆஃப் மதிப்பெண், பிளஸ் 2 தேர்வில் உயிரியல் - வேதியியல் பாடங்களிலும் ஒரே மதிப்பெண், நான்காவது பாடமாகக் கருதப்படும் கணிதத்திலும் ஒரே மதிப்பெண், ஒரே பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்ட மாணவர்களை வரிசைப்படுத்த சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறினார்.
கடந்த கல்வி ஆண்டில் (2014-15) எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை தயாரித்தபோது, 164 மாணவர்கள் ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பெற்றிருந்தனர். அவர்களில் மேலே குறிப்பிட்டவாறு அனைத்து ஒப்பீடுகளிலும் சமமாக இருந்த 68 மாணவர்களை வரிசைப்படுத்த கடந்த கல்வி ஆண்டில் சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்பட்டது.
அதேபோல இந்த ஆண்டும் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும்போது எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களை வரிசைப்படுத்த இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்படும். எனவே, எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை ஜூன் 15-இல் வெளியிடும்போது, நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) எத்தனை மாணவர்களுக்கு சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவரும் என்று டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறினார்.
ஜூன் 15-இல் தரவரிசைப் பட்டியல்: மறு கூட்டல், மறு மதிப்பீடு ஆகியவற்றுக்கு விண்ணப்பிதுள்ள பிளஸ் 2 மாணவர்களின் உயிரியல் - வேதியியல் - இயற்பியல் உள்ளிட்ட பாடங்களின் மதிப்பெண்கள் அடங்கிய சி.டி.யை வெள்ளிக்கிழமை (ஜூன் 12) மாலை அளிப்பதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சி.டி. கிடைத்தவுடன் மாணவர்களின் திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் இரண்டு நாள்களில் தயாரிக்கப்படும்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 15-ஆம் தேதி (திங்கள்கிழமை) எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவின் செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.

எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு வரும் 19ம் தேதி துவக்கம் :நடைபெறும் இடம் ஓமந்தூரார் கல்லூரிக்கு மாற்றம்


இதுவரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரியில் நடைபெற்று வந்த, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கலந்தாய்வு, இந்த ஆண்டு முதல், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்திற்கு மாற்றப்படுகிறது. முதற்கட்ட கலந்தாய்வு, 19ம் தேதி துவங்குகிறது.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான, 'ரேண்டம்' எண் வெளியீடு, சென்னை மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் நேற்று நடந்தது.'ரேண்டம்' எண் விவரத்தை, மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி, மாணவர் சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் ஆகியோர் வெளியிட்டனர். பின், அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:விண்ணப்பித்த அனைவருக்கும், 'ரேண்டம்' எண் தரப்பட்டுள்ளது. www.tnhealth.org என்ற இணையதளத்தில், பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்தால், 'ரேண்டம்' எண் விவரம் அறியலாம்.
இந்த ஆண்டில், 20வது அரசு மருத்துவக் கல்லுாரியாக, 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுடன், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி இணைந்துள்ளது. இதனால், எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 2,655 ஆக உயர்ந்துள்ளது.இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீத இடங்கள் போக, மீதம், 2,557 இடங்கள் தமிழகத்திற்கு கிடைக்கிறது. அரசு கல்லுாரியில், 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுய நிதி கல்லுாரிகளில் இருந்து, 780 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,432 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன.
வரும், 15ம் தேதி, தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான, முதற்கட்ட கலந்தாய்வு, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், 19ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரை நடக்கும். முதற்கட்ட கலந்தாய்வில், சுய நிதி கல்லுாரிகளின், பி.டி.எஸ்., இடங்கள் இடம்பெறாது.இவ்வாறு, அவர் கூறினார்.
எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நீண்ட காலமாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் தான் நடந்து வந்தது. தற்போது, போதிய வசதிகளுடன், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி அமைந்துள்ளதால், கலந்தாய்வு இங்கு மாற்றப்பட்டுள்ளது.

முதல் கட்டக் கலந்தாய்வு: அரசு, சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் எவ்வளவு?


தமிழகத்தில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வில் 2,257 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும், 551 சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரப்பப்பட உள்ளன. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு வரும் 19-ஆம் தேதி தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள், கோவை பி.எஸ்.ஜி. உள்பட 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 551 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் இந்தக்க கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன. சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்களும் முதல் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன. முதல் கட்டக் கலந்தாய்வில் இடம்பெறும் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் குறித்த விவரம் (பட்டியல்):
20 அரசு மருத்துவக் கல்லூரிகள்- 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள்
கல்லூரியின் பெயர் மொத்த இடங்கள் தமிழக ஒதுக்கீடு அகில இந்திய
ஒதுக்கீடு
1 சென்னை ஓமந்தூரார் 100 85 15
2 சென்னை (எம்எம்சி) 250 212 38
3 ஸ்டான்லி 250 213 37
4 கீழ்ப்பாக்கம் 150 128 22
5 செங்கல்பட்டு 100 85 15
6 மதுரை 155 132 23
7 தஞ்சாவூர் 150 127 23
8 கோவை 150 128 22
9 திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் 150 128 22
10 சேலம் மோகன் குமாரமங்கலம் 100 85 15
11 திருநெல்வேலி 150 127 23
12 தூத்துக்குடி 150 127 23
13 கன்னியாகுமரி 100 85 15
14 வேலூர் 100 85 15
15 தேனி 100 85 15
16 தர்மபுரி 100 85 15
17 விழுப்புரம் 100 85 15
18 திருவாரூர் 100 85 15
19 சிவகங்கை 100 85 15
20 திருவண்ணாமலை 100 85 15
8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்- 551 அரசு ஒதுக்கீட்டு இடங்கள்
கல்லூரியின் பெயர் ஒதுக்கீடு
1 சென்னை தாகூர் 75
2 பி.எஸ்.ஜி. கோவை 97
3 கற்பகம், கோவை 75
4 ஐ.ஆர்.டி, ஈரோடு 39
5 கற்பக விநாயகா,
மதுராந்தகம் அருகில் 65
6 வேலம்மாள், மதுரை 75
7 தனலட்சுமி சீனிவாசன்,
பெரம்பலூர் 75
8 ஸ்ரீ மூகாம்பிகை,
குலசேகரம், கன்னியாகுமரி 50

Thursday, June 11, 2015

வரும் 15ல் இன்ஜி., கவுன்சிலிங் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு


அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தொழிற்கல்வி மாணவர்களுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி, வரும், 15ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 580 அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, அண்ணா பல்கலை மூலம் ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 1.53 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஜூன், 28ம் தேதி விளையாட்டுப் பிரிவினர்; 29ம் தேதி மாற்றுத் திறனாளிகள்; ஜூலை, 1ம் தேதி முதல் பொதுக் கவுன்சிலிங் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தொழிற்கல்வி மாணவர்களுக்கு மட்டும் கவுன்சிலிங் தேதி இதுவரை அறிவிக்கவில்லை. இதுகுறித்து அண்ணா பல்கலை பேராசிரியரும், தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலருமான ரைமண்ட் உத்தரியராஜ் கூறும்போது, ''தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி, இன்னும் முடிவு செய்யவில்லை. வரும், 15ம் தேதி, 'ரேண்டம்' எண் வெளியிடப்படும். அப்போது, தொழிற்கல்வி மாணவர் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும்,'' என்றார்.
அண்ணா பல்கலை ஒற்றைச் சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கையில், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 100 இடங்கள் ஒதுக்கப்படும். தனியார் சுயநிதி இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 4 சதவீதம் ஒதுக்கப்படும்.

இன்று எம்.பி.பி.எஸ்., 'ரேண்டம்' எண் வெளியீடு


தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, விண்ணப்பித்தோருக்கான, 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது. தமிழகத்தில், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரியையும் சேர்த்து, 20 அரசு மருத்துவ கல்லுாரிகள், ஒரு அரசு பல் மருத்துவ கல்லுாரி உள்ளன. 2,655 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 100 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.
அகில இந்திய ஒதுக்கீடாக, 15 சதவீத இடங்கள் போக, மற்ற இடங்களுக்கு, மருத்துவக் கல்வி இயக்ககம், கலந்தாய்வு நடத்தி மாணவரை சேர்க்க உள்ளது. இதற்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது. பலர் ஒரே மாதிரியான, 'கட் - ஆப்', பிறந்த தேதி, பாடவாரியாக மதிப்பெண் என, எல்லாம் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புண்டு. அப்படியான சூழலில், அவர்களில், யாரை முன்னிலைப்படுத்துவது என்பதற்கான, 'ரேண்டம்' எண், இன்று வெளியிடப்படுகிறது.பிளஸ் 2 மறு கூட்டலுக்கான முடிவுகள் குறித்த, 'சிடி' இன்று, பள்ளிக் கல்வித் துறை தர உள்ளது. இதைத் தொடர்ந்து, 14ம் தேதி, தர வரிசை பட்டியலை வெளியிடவும், 19ம் தேதி, முதற்கட்ட கலந்தாய்வை நடத்தவும், மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.