Wednesday, August 5, 2015

பொறியியல் படிப்பின் எதிர்காலம் என்ன ஆகும்?


தமிழகத்தில், 536 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளுக்கு நடந்த கலந்தாய்வுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் கீழ் உள்ள இடங்களில் காலி ஏதும் இல்லை; இடங்கள் நிரம்பி விட்டன. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கல்வி பயில பல்வேறு கல்விப் பிரிவுகளில் இடம் இருந்தபோதும், 94,500 இடங்கள் நிரம்பவில்லை. இவ்வாறு நிரம்பாத கல்லூரிகள் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் என்பது, சேர்க்கை முடிவில்தெரியவந்திருக்கிறது.
பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிவுற்ற நிலையில், மெக்கானிக்கல் பிரிவுக்கு கிராக்கி அதிகம் இருந்தது. இப்பிரிவுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக கிராக்கி உள்ளது.கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, பொறியியல் படிப்பில் ஆர்வம் குறைந்திருப்பதும், பெண்களின் ஆர்வம் குறைந்திருப்பதும் நன்றாக தெரிகிறது.கணினி படிப்புக்கு முக்கியத்துவம் குறைந்ததும், இதில் கவனிக்கத்தக்கது. தவிரவும், முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை, 50 ஆயிரத்துக்கும் அதிகமாகும்.
இவைகளைப் பார்க்கும்போது, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளை, எந்த முறையில் திறன்அறி கல்வியாக மாற்ற வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.வேலைவாய்ப்பு, படித்து முடித்தபின் கிடைக்கும் வேலையின் நிரந்தரம், கிடைக்கும் சம்பளம் ஆகிய பல அம்சங்களை பெற்றோரும் மாணவ, மாணவியரும் முன் கூட்டியே எடை போடத் துவங்கியதன், அடையாளமாக இந்த பின்னடைவைக் கருதலாம்.
மேலும், 'இன்போசிஸ், விப்ரோ' உள்ளிட்ட நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்கு ஆள் எடுப்பதில், பல அணுகுமுறைகளை மாற்றிஉள்ளன. தகுதி, திறன் ஆகியவற்றை அலசி ஆய்ந்து எடுக்கும் முறைகளில் தேர்வு செய்யப்படுவோருக்கு, அந்த நிறுவனங்கள் அளிக்கும் பயிற்சிகளும் ஏராளம். அதே போல, கம்பெனியில் குறைந்த காலம் பணியாற்றி, சம்பளம் உட்பட பல்வேறு காரணங்களுக்காக, பணி மாறுவோர் எண்ணிக்கை குறைய, அவை முன்வந்திருப்பது நல்லது.மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் போன்ற படிப்புகளை படித்தவர்கள் தாங்கள் படிப்புடன் தொடர்பு உடைய வேலை என்பதை விட வங்கிகள், அரசுத்துறை வேலைக்கும் விண்ணப்பிக்க முன்வந்திருக்கின்றனர்.
பொறியியல் பட்டங்களில் உள்ள பலதுறைகளில் படிக்கும் மாணவ, மாணவியரை கம்பெனிகள் இணைத்துக் கொண்டு, பணியின் அனுபவத்தை கற்றுத்தருவது என்ற அணுகுமுறை முற்றிலும் நடைமுறையாகுமா என்பது தெரியவில்லை. அப்படியே அக்கம்பெனிகளில் பணித்திறன் பெற்றாலும், அதற்குப்பின் சில ஆண்டுகளில் ஒப்பந்த பத்திரம் எழுதித்தந்து வேலை பார்க்க வேண்டியதும் வரலாம்.அதைவிட, பி.ஆர்க்., படிப்பு போன்ற தொழில் சம்பந்தமான படிப்பு படித்தாலும், வேலை கிடைப்பதில்லை. இது தமிழகம் மட்டும் அல்ல, நாடு முழுவதும் எழுந்திருக்கும் பிரச்னையாகும்.
அகில இந்திய தொழில் நுட்பக்குழு தகவல்படி, நாடு முழுவதும் உள்ள, 16.5 லட்சம் பொறியியல் படிப்பு இடங்களில், 8.45 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.இவற்றைப் பார்க்கும்போது, பொறியியல் படிப்பு, பட்டம் பெற்றபின் கிடைக்கும் வேலை, படிப்பு தொடர்பான பணி, குறைந்தபட்ச சம்பளம் ஆகியவை குறித்து மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரும் முறையாக, முன்கூட்டியே ஆலோசனை பெறாவிட்டால், இந்த நிலை மேலும் மோசமாகலாம்.பொறியியல் பட்டதாரிகள் மற்ற அறிவியல், கலை பட்டதாரிகளை போல, கிடைக்கும் பணிகளை ஏற்று, அதற்குப்பின் தகுதி, திறமையை வளர்த்துக் கொண்டு, போட்டி களத்தில் இருக்கும் அவலநிலை அதிகரிக்கக் கூடாது.

'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' பயன்படுத்த இன்ஜினியரிங் மாணவர்களுக்கு தடை?


மாணவர்களிடம் தவறான தகவல் பரவுவதைத் தடுக்கவும், கல்வித் தரம் பாதிக்காமல் இருக்கவும், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' பயன்பாட்டுக்குத் தடை விதிக்க, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.
மாணவர்கள், தொழில்நுட்பம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில், அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்த, அண்ணா பல்கலை வளாகத்தில், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மொபைல் போன் கொண்டு வர, முதலில் தடை இருந்தது. சில ஆண்டுகளாக, மொபைல் போன் கொண்டு வரலாம்; ஆனால், வகுப்பு நேரங்களில் பயன்படுத்தக் கூடாது என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
தனித்தனியே...:
அண்ணா பல்கலை வளாகத்தில், வகுப்புகள் மற்றும் விடுதிகள் இருக்கும் பகுதிகளில், மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்களுக்கு, இலவச வை - பை வசதி செய்து தரப்பட்டுள்ளது. அனைவருக்கும், தனித்தனியே பயன்பாட்டு முகவரி மற்றும் ரகசியக் குறியீட்டு எண்ணும் தரப்பட்டுள்ளது. இந்த வை - பை வசதியில், அனைத்து வகை இணையதளங்களையும், தங்கள் மொபைல் போனில், மாணவர்கள் இலவசமாக இயக்க முடியும். ஆனால், ஆபாச கருத்துக்கள் மற்றும் படங்களுடன் கூடிய இணையதளங்கள், 'யூ - டியூப்' எனப்படும், வீடியோ பார்க்கும் வசதியுடைய தளங்கள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, இந்த ஆண்டு முதல், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களை தடை செய்ய, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது. ஆனால், 'டுவிட்டர், டெலக்ராம், இன்ஸ்டாக்ராம்' போன்ற தளங்களை இயக்க முடியும்.
அனைத்து பயிற்சிகளும்...:
இதுகுறித்து, அண்ணா பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது:அண்ணா பல்கலை மாணவர்கள், பட்டப்படிப்பை முடித்தவுடன் பணிக்குச் செல்லவோ, உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி படிப்பை தொடரவோ, தேவையான அனைத்து பயிற்சிகளும் தரப்படுகின்றன.தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதில், அண்ணா பல்கலை மாணவர் பின் தங்கி விடக்கூடாது என்பதற்காக, அனைத்து வகை தகவல் தொடர்பு வசதிகளும், இலவசமாக தரப்பட்டுள்ளன. ஆனால், சமீப காலமாக, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்றவற்றில் தவறான பதிவுகள், பரப்பி விடப்பட்டு, மாணவர்கள் கவனம் திசை திருப்பப்படுவதாக, பேராசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே, அண்ணா பல்கலைக்குள் வகுப்பு நேரங்கள் மற்றும் விடுதிகளில், சிறப்பு வகுப்பு நேரங்களில், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதள செயல்பாட்டைத் தடை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக குறிப்பிட்ட நேரங்களில் மட்டும், சமூக வலைதள இயக்கத்தை, வை-பை வசதியில் தடை செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சீனியர்களுக்கு தடை:
முதலாம் ஆண்டு பி.இ., - பி.டெக்., வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில், சீனியர் மாணவர்கள், ஜூனியர்களை, 'ராகிங்' செய்யாமல் தடுக்க, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சீனியர்கள் யாரும் ஜூனியருடன் குறிப்பிட்ட சில மாதங்களுக்கு பேசக்கூடாது என, உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜூனியர் மாணவர்கள் வரும் பகுதிகளில், 'ராகிங்' தடுப்புக் குழு பேராசிரியர் கண்காணிக்கவும், ராகிங் தடுப்பு வாகனம், அண்ணா பல்கலை முழுவதும் சுற்றி வரவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.