Saturday, May 31, 2014

சென்னை: பி.இ., கலந்தாய்வு ஜூன் 23ம் தேதி துவங்கும் என அண்ணா பல்கலை அறிவித்தது. வரும் கல்வி ஆண்டில் பி.இ.- பி.டெக். படிப்புகளில் சேர 1.75 லட்சம் மாணவ மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.
இதையடுத்து மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்த அட்டவணையை அண்ணா பல்கலை அறிவித்தது.
அதன் விவரம்
* ரேண்டம் எண் வெளியீடு - 11.6.2014
* ரேங்க் பட்டியல் வெளியீடு - 16.6.2014
* விளையாட்டு பிரிவின் கீழ் பெறப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு - 13.6.2014 முதல் 16.6.2014 வரை
* விளையாட்டு பிரிவுக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு - 17.6.2014
* விளையாட்டு பிரிவுக்கான கலந்தாய்வு துவக்கம் - 23.6.2014 முதல் 24.6.2014 வரை
* மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு - 25.6.2014
* பொதுப்பிரிவு கலந்தாய்வு - 27.6.2014 முதல் 28.7.2014 வரை
* தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு - 9.7.2014 முதல் 20.7.2014 வரை.

Thursday, May 15, 2014

எம்.பி.பி.எஸ்., படிக்க மாணவர்கள் ஆர்வம் : முதல் நாளில் 12,138 விண்ணப்பம் வினியோகம்

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வாங்குவதில் மாணவர்கள் ஆர்வம் காட்டினர். முதல் நாளில், 12,138 பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர்.

கலந்தாய்வு : தமிழகம் முழுவதும், 19 அரசு மருத்துவ கல்லூரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி யும் உள்ளன. எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, அகில இந்திய ஒதுக்கீடு போக, 2,172 இடங்கள் உள்ளன. பி.டி.எஸ்., படிப்புக்கு, மாநில ஒதுக்கீட்டில், 85 இடங்கள் உள்ளன. இதுதவிர, 12 சுய நிதி கல்லூரிகளில் இருந்து, 900 இடங்கள் வரை, எம்.பி.பி.எஸ்., இடங்களும், 909 பி.டி.எஸ்., இடங்களும் மாநில ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும். இதற்கு, "கட் - ஆப்' மதிப்பெண் அடிப் படையில், மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு மூலம் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப வினியோகம், தமிழகம் முழுவதும் உள்ள, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியில், நேற்று துவங்கியது. காலை முதலே மாணவ, மாணவியர்
ஆர்வமுடன் குவிந்தனர்.

சமர்பிக்க வேண்டும் : ஒரே நாளில், தமிழகம் முழுவதும், 12,138 விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில், 1,531 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளனன. அரசின் எல்லா மருத்துவக் கல்லூரி
களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தும், விவரம் தெரியாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாணவ, மாணவியர், சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு வந்திருந்தனர்.விண்ணப்பங்கள், இம்மாதம், 30ம் தேதி வரை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூன், 2ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Wednesday, May 14, 2014

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ்.,படிப்புகளுக்கான விண்ணப்பம் வினியோகம் துவங்கியது

நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம்: 25 மாணவர்கள் கைது

பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்ற இன்ஜினியரிங், மருத்து நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டத்தி்ல் ஈடுபட்ட வட இந்திய மாநிலங்களை சேர்ந்த 25 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தி்ல வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் சிட்டி கிரைம் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டனர். ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதாக பீகார் 12, உ.பி. 8 ,ஜார்கண்ட், சட்டீஸ்கர், ம.பி. ஆகிய மாநிலங்களை சேர்ந்த 25 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காலண்டர் – மே 2014
மே மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிகள் ஆகியவற்றைக் காட்டும் காலண்டர் இது. தனியே எடுத்து பத்திரப்படுத்துங்கள்.
புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்புவோர் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 2.
புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்படத் தொழில்நுட்பம் தொடர்பான முதுநிலை சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 3.
அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிக்க அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு (AIPMT) நடைபெறும் தேதி: மே 4.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட். படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 9.
தமிழகத்தில் மார்ச் மாதம் நிறைவடைந்த பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: மே 9.
மேனேஜ்மெண்ட் படிப்புகளுக்காக அகில இந்திய மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் நடத்தும் MAT நுழைவுத் தேர்வு (காகிதத்தில்) நடைபெறும் தேதி: மே 4. கம்ப்யூட்டர் மூலம் நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 10.
அகில இந்திய கால்நடை மருத்துவப் படிப்பு (AIPVT) நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 10.
டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்சஸில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சமூக அறிவியல் படிப்புகளைப் படிக்க பிளஸ் டூ மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 10.
இந்தியன் ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் புள்ளியியல் இளநிலை பட்டப் படிப்பு படிக்க எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: மே 11.
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து இளநிலை சட்டப் படிப்பைப் படிக்க அகில இந்திய அளவில் CLAT நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 11.
பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் கல்வி நிலையத்தில் பல்வேறு பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோருக்கு பிட்சாட் ஆன்லைன் நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 14 முதல் ஜூன் 1 வரை.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 15.
சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃப்ஷரிஸ் (சிப்நெட்) நடத்தும் பேச்சலர் ஆஃப் ஃப்ஷரி சயின்ஸ் படிப்பில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 16.
புனேயிலுள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 17.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட். படிக்க நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 17.
திருவாரூர் உள்ளிட்ட 7 மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப் படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 17 மற்றும் மே 18.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 2ஏ எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: மே 18.
பயோ-டெக்னாலஜி முதுநிலை பட்டப் படிப்பில் சேர ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நடத்தும் ஒருங்கிணைந்த பயோ டெக்னாலஜி நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 19.
ஃபுட்வேர் டிசைன் அண்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிட்யூட்டில் பி.டெஸ். உள்ளிட்ட பல்வேறு படிப்புகளைப் படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 19.
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் பி.டெக்., மெரைன் என்ஜினீயரிங், பி.எஸ்சி. நாட்டிக்கல் சயின்ஸ், எம்.பி.ஏ. போன்ற பல்வேறு படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 20.
வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் (சி.எம்.சி.) எம்.பி.பி.எஸ்., பி.எஸ்சி. (நர்சிங்) உள்ளிட்ட படிப்புகளில் சேர எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: மே 23.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு சேர விரும்புவோர் விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 23.
திருச்சி உள்ளிட்ட நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் (என்.ஐ.டி.) எம்.சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 25.
மத்திய அரசுப் பணியில் ஜூனியர் என்ஜினீயரிங் பணிகளில் டிப்ளமோ மாணவர்களைச் சேர்க்க ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: மே 25.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 30.
புவனேஸ்வரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச், மும்பையில் உள்ள சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்சஸ் கல்வி நிறுவனங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி படிப்பில் சேர நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி : மே 31.
ரீஜினல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுக்கேஷனில் நான்காண்டுகளுக்கான ஒருங்கிணைந்த பி.எஸ்சி.எட். படிப்பில் சேர நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: மே 31.
-புதிய தலைமுறை

Tuesday, May 13, 2014

என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் 3–வது வாரம் தொடங்கும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்

என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னையில் மட்டுமே நடத்தப்படும் என்றும், ஜூன் 3வது வாரம் கலந்தாய்வு தொடங்கும் என்றும் அண்ணாபல்கலைக்கழக அதிகாரி தெரிவித்தார்.

என்ஜினீயரிங் சேர்க்கை

தமிழ்நாட்டில் 570 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்பில் சேர அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் 2 லட்சம் உள்ளன. இது போக 85 ஆயிரம் இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ளன.

அரசு ஒதுக்கீட்டு இடங்களான 2 லட்சம் இடங்களில் சேர்வதற்காக அண்ணாபல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் 20–ந்தேதி வரை வழங்கப்பட உள்ளன. அந்த தேதிதான் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்கவும் கடைசி நாள். இப்போதே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் அனுப்பி வருகிறார்கள்.

சென்னையில் மட்டும் கலந்தாய்வு

கலந்தாய்வு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தென் மாவட்ட மாணவர்கள் சென்னைக்கு வருவது சிரமம் என்று கருதி சென்னை உள்பட 3 இடங்களில் நடைபெற்றது.

ஆனால் அப்போது கலந்தாய்வு நடத்துவது சிரமமாக இருந்தது. கம்ப்யூட்டர்கள் சரியாக இயங்கவில்லை. எனவே சென்னையில் மட்டும் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு இந்த வருடம் சென்னையில் உள்ள அண்ணாபல்கலைக்கழகத்தில் மட்டுமே என்ஜினீயரிங் சேர்வதற்கான கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு ஜூன் மாதம் 3–வது வாரத்தில் தொடங்கும் என்றார்.
மதிப்பெண் பட்டியல், 'டிசி'க்காக காத்திருக்க வேண்டாம்: அண்ணா பல்கலை வேண்டுகோள்

'பி.இ.,க்கு விண்ணப்பிக்க, மாற்றுச் சான்றிதழான, 'டிசி' மற்றும் மதிப்பெண் பட்டியலுக்காக, மாணவர்கள் காத்திருக்க வேண்டாம். இரண்டும் இல்லாமலும், பி.இ., விண்ணப்பத்தை அனுப்பலாம்,'' என, பி.இ., சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்திரியராஜ் தெரிவித்தார்.

பி.இ., படிப்பில் சேர, கடந்த ஒரு வாரத்தில், 1.68 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனையாகி உள்ளன. 'விண்ணப்பத்துடன், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், 'டிசி' ஆகியவை இணைக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள், மே 20ம் தேதி. ஆனால், வரும் 21ம் தேதி தான், மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது. மேலும், மதிப்பெண் பட்டியல் வழங்கும்போது, 'டிசி'யையும் சேர்த்து வழங்க, பள்ளிகள் திட்டமிட்டு உள்ளன. இதனால், இந்த இரு சான்றிழ்களும் இல்லாமல், 20ம் தேதிக்குள், விண்ணப்பத்தை அனுப்பலாமா என, மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, அண்ணா பல்கலை, பி.இ., சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்திரியராஜ் கூறியதாவது: இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தேர்ச்சி பட்டியலை, விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பினால் போதும். மதிப்பெண் பட்டியலை பெற்றபின், அதன் நகலை, தபால் மூலம், அண்ணா பல்கலைக்கு அனுப்ப வேண்டும். நாங்களும், தேர்வுத் துறை இயக்குனரகத்தில் இருந்து, 'சிடி' பெற்று, மதிப்பெண் சரியாக உள்ளதா என்பதை பார்ப்போம். மதிப்பெண் பட்டியல் நகலை அனுப்பும்போது, அதன் மேல் பகுதியில், பி.இ., விண்ணப்ப எண்ணை குறிப்பிட வேண்டும். அப்போது தான், குறிப்பிட்ட விண்ணப்பத்துடன், மதிப்பெண் பட்டியல் நகலை, எங்களால் இணைக்க முடியும். 'டிசி'க்காகவும், மாணவர் காத்திருக்க தேவையில்லை. மதிப்பெண் பட்டியல் நகலை அனுப்பும்போது, 'டிசி' நகலையும், சேர்த்து அனுப்பலாம்.இந்த இரு சான்றிதழுக்காக, பி.இ., விண்ணப்பம் அனுப்புவதில், கால தாமதம் செய்ய வேண்டாம். மாணவர்கள், உடனடியாக விண்ணப்பத்தை அனுப்பலாம். மாணவர்கள், கல்லூரி மற்றும் பாட பிரிவை தேர்வு செய்வதில், தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தபின், படிப்பில், ஆழ்ந்த கவனத்துடன் செயல்பட்டு, நன்றாக படித்தால், கண்டிப்பாக வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு, ரைமண்ட் தெரிவித்தார்.
வேளாண் படிப்புகளில் சேர மாணவர்களிடம் ஏக கிராக்கி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டப் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து திங்கள்கிழமை ஒரே நாளில் 7,075 பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளதாக மாணவர் சேர்க்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2014-15 கல்வியாண்டில் 13 பட்டப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி, திங்கள்கிழமை தொடங்கியது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் விண்ணப்பம் பெற வந்திருந்தனர்.

இந்த ஆண்டில் பட்டப் படிப்பில் சேர ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால், பல்கலைக்கழக வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் மூலம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய முதல் நாளில் 7,075 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 2,678 பேர் ஆன்லைனில் பதிவு செய்து, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர்.

வேளாண் பல்கலைக்கழகத்தின் இளநிலை படிப்புகளில் சேர ஜூன் 7-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டில் வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர மாணவ, மாணவிகளிடையே கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.

1,820 இடங்களுக்கு கடும் போட்டி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உறுப்புக் கல்லூரிகளில் 1,040 பேரும், இணைப்புக் கல்லூரிகளில் 780 பேரும் என மொத்தம் 1,820 பேர் சேர்க்கப்படுகின்றனர். இதில் இணைப்புக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தாலும், மீதமுள்ள 50 சதவீத இடங்கள் அந்தந்தக் கல்லூரிகளாலும் நிரப்படுகிறது.

2013-ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர ஓ.சி. பிரிவினருக்கு 196.00 கட் ஆஃப் மதிப்பெண்கள் இருந்தது. அதேபோல பி.சி. பிரிவினருக்கு 189.00-ம், பி.சி.எம். பிரிவினருக்கு 193.25-ம், எம்.பி.சி. பிரிவினருக்கு 187.25-ம், எஸ்.சி. பிரிவினருக்கு 178.50-ம், எஸ்.சி.ஏ. பிரிவினருக்கு 188.25-ம், எஸ்.டி. பிரிவினருக்கு 188.00 கட் ஆஃப் மதிப்பெண்கள் இருந்தது.

வேளாண் படிப்புகளில் சேர கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 40,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய முதல் நாளே 7,075 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம். இன்னும் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 7-ஆம் தேதி வரை காலக்கெடு உள்ளதால், இந்த ஆண்டில் வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.

அதேபோல 1,820 இடங்களே உள்ளதால், மாணவர்களிடையே கடும் போட்டியும், கட் ஆஃப் மதிப்பெண்ணும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டில் முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஜூலை 14-ஆம் தேதி முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வகுப்புகள் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அரசாணையை மீறி மாணவர் சேர்க்கை நடத்தும் கல்லூரிகள்பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான சில மணி நேரங்களிலேயே எந்தக் கல்லூரியில் எந்தப் படிப்பை தெரிவு செய்வது என்பதில் மாணவருக்கு மட்டுமல்ல, பெற்றோரும் நிதானமின்றி அவசரம் காண்பிக்கின்றனர். ஐ.டி. மோகம் குறைந்த நிலையில், பொறியியல் படிப்புகளில் சேரும் ஆர்வம் மாணவர்களிடையே குறைந்து வருகிறது.

இதனால் பி.காம். பி.பி.எம். படிப்புகள் மற்றும் அடிப்படை கணித படிப்புகளில் பி.எஸ்சி. கணிதம், வேதியியல், இயற்பியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

தேர்வு முடிவுகள் வெளியானதும், பெற்றோர் தங்களது குழந்தைகளை எந்த படிப்பில் சேர்ப்பது என்று அவசரம் காட்டுகின்றனர். இந்த அவசர நிலையை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள், பணத்தை வாங்கி

மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்து விடுகின்றனர். மாணவர்களும் ஒருவித பதபதைப்புடனே படிப்புகளில் சேரும் சூழ்நிலை உள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிந்து 10 நாள்களுக்குப் பிறகே கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் என்று தமிழக அரசின் அரசாணை உள்ளது. ஆனால், இந்த அரசாணையை தனியார் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் கண்டுகொள்வதில்லை. அதேபோல, பிளஸ் 2 தேர்வு வெளியானவுடனேயே மாணவர் சேர்க்கை நடத்துகின்றனர்.

கடந்த இரு ஆண்டுகளாக வேளாண் படிப்புகளில் சேர மாணவ, மாணவியர் ஆர்வம் காண்பிக்கின்றனர். இந்தப் படிப்பை முடித்தவுடன் ஏதாவது ஒரு வங்கியிலோ அல்லது உர நிறுவனங்கள், விதை நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் துறைகளில் வேலை கிடைக்கிறது. வேளாண் ஆராய்ச்சிகளும் விரிவாக நடந்து வருவதால், வேளாண் படிப்புகளுக்கு நல்ல மவுசு உள்ளது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிளஸ் 2 விடைத்தாள் நகல்: 57 ஆயிரம் பேர் விண்ணப்பம்
பிளஸ் 2 விடைத்தாள் நகல்: 57 ஆயிரம் பேர் விண்ணப்பம்

ஆசிரியர் டிப்ளமோ படிப்பு: நாளை முதல் விண்ணப்பம்

கால்நடை சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம்

5 ஆண்டு சட்டப் படிப்பு: ஜூலையில் கலந்தாய்வு

கால்நடை மருத்துவப் படிப்பு: கட்-ஆஃப் மதிப்பெண் 0.5 அதிகரிக்கும்: துணைவேந்தர் தகவல்

அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ்., பிடிஎஸ்: இதுவரை 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு இல்லை: சான்றிதழ் இல்லாமல் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பி.இ. கலந்தாய்வு விண்ணப்பம்: 1,500 பேர் மட்டுமே சமர்ப்பிப்பு

Friday, May 9, 2014

என்ஜினீயரிங் – மருத்துவம் கட்–ஆப் மதிப்பெண் உயருகிறது

பிளஸ்–2 தேர்வு முடிவு இன்று வெளியானது.

கடந்த ஆண்டை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் மட்டுமின்றி பாட வாரியாக 200–க்கு 200 எடுத்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

மருத்துவம், என்ஜினீயரிங் உயர் படிப்புகளில் சேருவதற்கான அடிப்படையாக உள்ள பாடங்களில் மாணவ–மாணவிகள் அதிக அளவில் மதிப்பெண்களை குவித்துள்ளனர். என்ஜினீயரிங் கட்–ஆப் மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் கடந்த ஆண்டை விட 200–க்கு 200 அதிக அளவில் எடுத்துள்ளனர்.

கணிதம் பாடத்தில் 3882 பேர் சென்டம் எடுத்துள்ளனர். இயற்பியல் பாடத்தில் 2710 பேரும், வேதியியல் பாடத்தில் 1693 பேரும் சென்டம் எடுத்து உள்ளனர். கடந்த வருடத்தை காட்டிலும் இந்த ஆண்டு 4398 பேர். இந்த மூன்று பாடங்களிலும் 200–க்கு 200 எடுத்துள்ளனர்.

இதனால் என்ஜினீயரிங் கட்–ஆப் மதிப்பெண் ஒன்று அளவில் கூட வாய்ப்பு உள்ளது.

உதாரணத்திற்கு ஒரு என்ஜினீயரிங் கல்லூரியின் கடந்த ஆண்டு கட்–ஆப் மார்க் 198–ஆக இருந்தால் இந்த வருடம் 199 ஆக உயர வாய்ப்பு உள்ளது.

இதே போல எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கான கட்–அப் மதிப்பெண்ணும் கூடுகிறது.

மருத்துவ படிப்பில் சேருவதற்கான உயிரியல் பாடத்தில் மாணவர்களின் சென்டம் கடந்த ஆண்டை விட சற்று குறைவாக இருந்தாலும் கூட இயற்பியல், வேதியியல் பாடங்களில் 200–க்கும் 200 பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மருத்துவ கட்–ஆப் மதிப்பெண் 0.5 சதவிதம் உயர வாய்ப்பு உள்ளது.

அதாவது அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த ஆண்டு கட்–ஆப் மார்க் 198 ஆக இருந்தால் இந்த வருடம் 198.5 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, May 8, 2014

பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை மே 13ல் விண்ணப்பம்
அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில், 2014 - 15ல், நேரடியாக, இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் சேர, விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.
மே 13 முதல், ஜூன் 5 வரை, காலை, 10 மாலை 5 மணி வரை, 34 மையங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். 300 ரூபாய்க்கு வரைவோலை எடுத்து, "செயலர், இரண்டாம் ஆண்டு பி.இ., பி.டெக் பட்டப்படிப்பு சேர்க்கை 201, அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி' என்ற பெயரில், மையங்களில் கொடுத்து, விண்ணப்பங்களை நேரடியாக பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜூன் 6, மாலை 5 மணிக்குள், வந்து சேர வேண்டும். சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஜூன் கடைசி வாரத்தில், காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும். தரவரிசை பட்டியல், அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி இணைய தளத்தில் (www.accet.in) வெளியிடப்படும்.

Wednesday, May 7, 2014

ரஷ்யாவில் மருத்துவம், பொறியியல் படிப்பு: கல்விக் கண்காட்சிக்கு அழைப்பு

சென்னை: பிளஸ் 2 வகுப்பு முடித்த பள்ளி மாணவர்கள் ரஷ்யாவில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பதற்கான சிறப்பு கல்விக் கண்காட்சி ரஷ்ய தூதரகத்தில் நடைபெற உள்ளது.
ரஷ்யாவில் மருத்துவம் மற்றும் பொறியில் படிப்பது குறித்த சிறப்பு கல்வி கண்காட்சி வரும் 10, 11ம் தேதிகளில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில் நடைபெற உள்ளது. அதில் மருத்துவம், பொறியில், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் பாடப்பிரிவுகளை சேர்ந்த 11 பல்கலைகள் கலந்து கொள்கின்றன. மேலும், பிளஸ் 2 வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என 2 மொழியிலும் படித்து 80 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியரில் 40 பேருக்கு தங்கும் வசதி, கல்வி கட்டணம் ஆகியவற்றிற்கு சிறப்பு கல்வி உதவி தொகை வழங்கப்படும்.
எவ்வளவு செலவாகும்?
இதுகுறித்து தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் டிமிட்ரி வி. லொமகின் கூறியதாவது: தற்போது ரஷ்யாவில் ஐந்தாயிரம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த ஆண்டை விட 10 சதவீதம் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடக்க உள்ள கல்வி கண்காட்சியில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான வழிமுறைகள், மாணவர்களுக்கு விளக்கப்படும். ரஷ்ய மொழியில் படிக்க ஓராண்டிற்கு கல்வி கட்டணம் 1,200 முதல் 4,000 அமெரிக்க டாலர்கள் வரையும், ஆங்கிலத்தில் படிக்க 2,400 முதல் 6,500 டாலர்கள் வரையும் செலவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆறு ஆண்டுகள் மருத்துவ படிப்பு ரஷ்ய பல்கலைகளில் அங்கீகாரம் பெற்ற இந்திய பிரதிநிதி ரவிச்சந்திரன் கூறியதாவது: ரஷ்யாவில் வழங்கப்படும் மருத்துவ பட்டம் இந்திய மருத்துவ கவுன்சில், யுனெஸ்கோ, அமெரிக்கா மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது, ரஷ்யாவில் கல்விக் கட்டணம் குறைவு. ரஷ்ய மொழியில் மருத்துவம் படிக்க 7 ஆண்டுகளும், ஆங்கிலத்தில் படிக்க 6 ஆண்டுகளும் செலவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தகுதி என்ன?
பிளஸ் 2 வகுப்பில் பொது பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., / எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். மாணவ மாணவியர் மதிப்பெண் சான்றிதழுடன், வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் கண்காட்சியில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 044 - 2498 8215 / 92822 21221 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Monday, May 5, 2014

மருத்துவப்படிப்பு: மே 14 முதல் விண்ணப்பம்

தமிழ்நாடு முழுவதும் 19 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து படிக்க 2555 இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்றுவிடும். மீதி உள்ள இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கிடைக்கும்.பிளஸ்–2 தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை (மே 9) வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில், மருத்துவப்படிப்பில்சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை மருத்துவக்கல்வி தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, மருத்துவப்படிப்பில் சேர தமிழ்நாடு முழுவதும் மே 14–(புதன்கிழமை) முதல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.அதே போல், பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்புக்கும் மே 14 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த படிப்புக்கு அகில இந்திய ஒதுக்கீடு போக 85 இடங்கள் உள்ளன. அதாவது தமிழ்நாட்டில் பிராட்வே அருகே தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி ஒன்று மட்டுமே உள்ளது. இதில் தான் அந்த 85 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.விண்ணப்பங்கள் 30ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க ஜூன் 2ம் தேதி கடைசி நாள். இந்த தகவலை மருத்துவக்கல்வி இயக்குநர் டாக்டர் கீதா லட்சுமி, மருத்துவக்கல்வி தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மே 9 முதல் விண்ணப்பம் விநியோகம்

சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டுக்கான பொறியியல் மற்றும் இளங்கலைப் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் மே 9-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15 ஆண்டுக்கான பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண் ணப்ப படிவம் மே 9-ம் தேதி முதலும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை இளங்கலைப் பட்டப் படிப்புக்கான விண்ணப் பங்கள் மே12-ம் தேதி முதல் 31-ம் தேதிவரையிலும் விநி யோகிக்கப்படவுள்ளன. விண் ணப்பத்தைப் பெற்று, அத னைப் பூர்த்தி செய்து ஜூன் 2-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

பல்கலைக்கழக அலுவலக வளாகத்திலும், அனைத்து தொலைதூரக் கல்வி மையங் களிலும் விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கும். பொறியியல் மற்றும் இளங்கலை வேளாண்மை, தோட்டக் கலை ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தின் விலை ரூ.800. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.400-க்கு வழங்கப்படும். அஞ் சல் வழியாகப் பெறுவோர் அஞ்சல் கட்டணமாகக் கூடுத லாக ரூ.50 செலுத்தி, சென்னை யில் மாற்றத்தக்க வங்கி வரை வோலையை (Demand Draft) பதிவாளர் அண்ணாமலைப் பல் கலைக்கழகம் (Registrar, Annamalai University) என்ற பெயரில் எடுத்து பதி வாளர், அண்ணாமலைப் பல் கலைக்கழகம், அண்ணாமலை நகர்-608002, சிதம்பரம் என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப் பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அனுமதி சேர்க்கை முற்றிலும் தகுதி அடிப்படை யிலும், அரசு விதிமுறை கள் இடஒதுக்கீடு முறையில் நடைபெறும். கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப் படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
570 பொறியியல் கல்லூரிகளின் முழு விவர பட்டியல்: அண்ணா பல்கலை. இணையதளத்தில் வெளியீடு

பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வசதிக்காக 570 பொறியி யல் கல்லூரிகளின் முழு விவர பட்டியலை மாவட்ட வாரியாக அண்ணா பல்கலை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

570 பொறியியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக துறைசார்ந்த பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என மொத்தம் 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 2 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

கலந்தாய்வுக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த சனிக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகின்றன. முதல்நாள் அன்றே சுமார் 68 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்தன.

வருகிற 20-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு ஜூன் 3-வது வாரம் கலந்தாய்வு நடத் தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது.

இதற்கிடையே, கலந்தாய் வுக்கு வரும் மாணவ-மாணவிகள் வசதிக்காக 570 பொறியியல் கல்லூரிகளின் முழு விவர பட்டியலை மாவட்ட வாரியாக அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிட்டுள்ளது.

இதில், கல்லூரி அமைந் துள்ள இடம், அங்கு செல்வதற் கான போக்குவரத்து வசதி, வழங் கப்படும் படிப்புகள், மொத்த இடங்கள், விடுதி வசதி, உணவு கட்டணம், கல்விக் கட்டணம், சிறுபான்மை கல்லூரி யாக இருந் தால் அதுபற்றிய விவரம் என கல்லூரி தொடர்பான அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
முதுகலை ஆசிரியர் தேர்வு விவகாரம்: ஜூன் மாதத்திற்கு பிறகே நடவடிக்கை

முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர் கள், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை (டி.ஆர்.பி.,), நேற்று மீண்டும் முற்றுகையிட்டனர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம், ஓராண்டாக இழுபறியில் இருந்து வருகிறது. தமிழ் பாடத்திற்கு மட்டும், இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமனமும் நடந்து விட்டது; இதர பாடங்களுக்கு, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, தேர்வர்கள், கடந்த வாரம், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நேற்றும், பல மாவட்டங்களில் இருந்து வந்த, 100 பேர், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு, டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யாரை சந்தித்து பேசினர். அப்போது, ''சென்னை உயர்நீதிமன்றத்தில், பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தற்போது, உயர்நீதிமன்றத்திற்கு, கோடை விடுமுறை. ஜூன் மாதம் தான், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். வழக்கை விரைந்து முடித்து, இறுதி பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, விபு நய்யார் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து தேர்வர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கால்நடை மருத்துவ படிப்புகள் 12ம் தேதி முதல் விண்ணப்பம்

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு, வரும், 12ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது; இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை சார்பில், வரும் கல்வியாண்டிற்கு, கால்நடை மருத்துவம், உணவு தொழில்நுட்பம் மற்றும் கோழியின உற்பத்தி தொழில்நுட்ப இளநிலை பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பம், வரும், 12ம் தேதி முதல், 30ம் தேதி வரை, வழங்கப்படுகிறது. சென்னை, தர்மபுரி, மதுரை, வேலூர், விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள, 14 மையங்களில், அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இது தவிர, இணையதளம் மூலமும், இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜூன், 2ம் தேதி மாலைக்குள், பல்கலையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய 3 முக்கிய அம்சங்கள்: பி.மன்னர் ஜவஹர் தகவல்

கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கு முன் அந்தக் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான வளாகத் தேர்வு ஆகிய 3 அம்சங்களை மாணவர்கள் கவனிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர் கூறினார்.

"தினமணி' மற்றும் "ஸ்ரீ சாஸ்தா கல்வி குழுமம்' ஆகியவை இணைந்து பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டும் "சிகரத்தை வெல்வோம்' நிகழ்ச்சியை சென்னையில் திங்கள்கிழமை நடத்தின. இதில் மன்னர் ஜவஹர் பேசியதாவது:

உயர் கல்வியில் ஏராளமான படிப்புகள் உள்ளன. கலை, அறிவியல் படிப்புகள், பொறியியல் படிப்புகள், மருத்துவப் படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகள் என ஏராளமான படிப்புகள் உள்ளன.

பிளஸ் 2 முடித்து வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் படிப்புகளிலேயே சேரவே விரும்புகின்றனர். தமிழகம் முழுவதும் இப்போது 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 3 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் இருக்கின்றன. எனவே, பொறியியல் படிக்க இடம் கிடைப்பது எளிது. ஆனால், சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்கிறதா என்பதுதான் முக்கியம்.

இவ்வாறு பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், கல்லூரிகளில் சேருவதற்கு முன்பு 3 முக்கிய அம்சங்களைப் பார்க்க வேண்டும்.

ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதி மற்றும் வேலைவாய்ப்புக்கான வளாகத் தேர்வு ஆகிய மூன்றையும் அறிய வேண்டியது மிக அவசியம்.

ஆசிரியரைப் பொருத்தவரை உயர் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்பதைவிட, ஆசிரியர்கள் அனைவரும் உரிய கல்வித் தகுதியைப் பெற்றிருக்கின்றனரா, ஆசிரியர் - மாணவர் உறவு எப்படி இருக்கிறது உள்ளிட்டவற்றைக் கவனிக்க வேண்டும்.

உள்கட்டமைப்பு வசதிகளைப் பொருத்தவரை நூலகம், ஆய்வகம், வகுப்பறை, கம்ப்யூட்டர் வசதிகள் முழுமையாக இடம்பெற்றிருக்க வேண்டும்.

வளாகத் தேர்வை பொருத்தவரை, ஆண்டுக்கு ஆண்டு கல்லூரியில் மாணவர்களைத் பணிக்குத் தேர்வு செய்ய எத்தனை நிறுவனங்கள் வருகின்றன என்பதை அறிய வேண்டும்.

பல்கலைக்கழகங்கள், அதன் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதால், அங்குள்ள ஆசிரியர்கள் அனைவரும் ஈடுபாட்டோடு பணிபுரிய வாய்ப்புகள் அதிகம். உள்கட்டமைப்பு வசதிகளும் முழுமை பெற்றிருக்கும்.

ஆனால், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இந்த மூன்றும் முழுமை பெற்றிருப்பதை உறுதி செய்வது கடினம். எனவே, இந்த கல்லூரிகளின் முன்னாள் மாணவர்கள், அவற்றில் படித்த நண்பர்கள் மூலம் அந்தக் கல்லூரிகளின் நிலை குறித்து அறிந்து கொண்டு அதன் பிறகே கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும்.

விருப்பமான பிரிவை தேர்வு செய்ய வேண்டும்: பொறியியல் படிப்புகளில் மெக்கானிக்கல், சிவில், எல்க்ட்ரிக்கல், பயோ-டெக்னாலஜி என 89 பிரிவுகள் உள்ளன. இவற்றில் தங்களுக்கு விருப்பமானப் பிரிவை மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்து படிக்க வேண்டும். பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஆலோசனை வழங்குவதோடு நிறுத்திவிட வேண்டும். உயர் கல்வியில் மாணவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்களோ, அதைப் படிக்க அனுமதிப்பதே சிறந்தது.

முதலாமாண்டு மட்டுமே கடினம்: தமிழகத்தில் பொறியியல் சேர்பவர்களில் 68 சதவீதம் பேர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு படிப்பதில் அதிக ஆர்வம் இருக்கும். ஆனால், தமிழ் வழியில் படித்து வந்தோம் என்கிற தாழ்வு மனப்பான்மையும் இருக்கும். இதனால், இந்த மாணவர்கள் பல்வேறு சூழல்களில் பின்தங்க வேண்டியச் சூழல் ஏற்படுகிறது.

இந்த எண்ணத்தை கிராமப்புற மாணவர்கள் முதலில் கைவிட வேண்டும். பள்ளி படிப்பை முடித்து வரும் மாணவர்களுக்கு, பொறியியல் படிப்பில் முதலாமாண்டு மட்டும்தான் கடினமாக இருக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்பு மிகவும் எளிதாகிவிடும். எனவே, தேவையற்ற அச்சத்தை மாணவர்கள் கைவிடவேண்டும் என்றார் மன்னர் ஜவஹர்.
பி.இ. கலந்தாய்வு: இதுவரை 1.17 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம்

பொறியியல் ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் இரண்டு நாள்களில் 1.17 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை(மே 9) வெளியிடப்படுகின்றன. இதையடுத்து பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்க உள்ளது.

பி.இ விண்ணப்ப விநியோகம் சனிக்கிழமை (மே 3)தொடங்கியது. முதல் நாளில் தமிழகம் முழுவதும் உள்ள 60 விற்பனை மையங்களில் 69 ஆயிரத்து 925 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை விநியோகம் இல்லை என்பதால், திங்கள்கிழமை (மே 5) விண்ணப்ப விநியோகம் மீண்டும் தொடங்கியது. இரண்டாம் நாளான திங்கள்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 47 ஆயிரத்து 518 விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

Sunday, May 4, 2014

எம்.பி.பி.எஸ்., சேர்க்கை விண்ணப்பங்கள் விற்பனை

சிதம்பரம், அண்ணாமலை பல்கலையில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் விற்பனை, நேற்று முதல் துவங்கியது. பல்கலை நிர்வாக சிறப்பு அதிகாரி, ஷிவ்தாஸ் மீனா கூறியதாவது: இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், ஜூன் 10ம் தேதி வரை விற்பனை செய்யப்படும். விண்ணப்பங்கள், அண்ணாமலை பல்கலைக் கழக நிர்வாக அலுவலகம் மற்றும் அனைத்து தொலைதூர கல்வி மையங்களில் கிடைக்கும். விண்ணப்பத்தின் விலை, 1,500 ரூபாய். தபாலில் பெற விரும்புவோர், 1,550 ரூபாய்க்கு, சென்னையில் மாற்றத்தக்க வகையில், வரைவோலை (டி.டி) எடுத்து, பதிவாளர், அண்ணாமலை பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம் என்ற முகவரிக்கு அனுப்பி, பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜூன் 11ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மாணவர்கள் சேர்க்கை, முற்றிலும் தகுதி அடிப்படையிலும், அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் நடைபெறும். மாணவர்களின் மதிப்பெண் அடிப் படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வு விவரங்கள், பின்னர் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, பல்கலைக் கழக உதவி மைய தொலைபேசி 04144 -238 348, 238 349 எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
மருத்துவ நுழைவு தேர்வு: தமிழகத்தில் 22 ஆயிரம் பேர் பங்கேற்பு

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் நேற்று நடந்தது. தமிழகத்தில், 22 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும், மருத்துவ பல்
கலைகளில், 15 சதவீதம் இடங்களை நிரப்புவதற்கு, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மருத்துவ பல்கலைகளில், 15 சதவீதம் இடங்கள் மூலம், 3,000 
எம்.பி.பி.எஸ்., மற்றும், 250 பி.டி. எஸ்., இடங்கள், இந்த நுழைவுத்தேர்வு மூலம் நிரம்புகிறது. நாடு முழுவதும், 50 நகரங்களில், 929 மையங்களில், 5.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில், சென்னையில் அமைக்கப்பட்டிருந்த, 35 தேர்வு மையங்களில், 22 ஆயிரம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
சென்னையில், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன....
வெளிநாடுகளில் "டாக்டர் சீட்' : ஆசை காட்டி பணம் பறிக்கும் போலி புரோக்கர்கள்

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளிவர உள்ளதால், வெளிநாடுகளில் உள்ள மருத்துவ கல்லூரிகளில், "டாக்டர் சீட்' வாங்கித் தருவதாக கூறி, மோசடி செய்யும் புரோக்கர்கள் அதிகரித்து உள்ளனர். பிளஸ் 2க்கு பின், தங்களது குழந்தைகளை, டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்பதே, ஒவ்வொரு பெற்றோரின் விருப்பமாக உள்ளது. பிளஸ் 2 வகுப்பில், அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு மட்டுமே, தமிகழத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது. மொபைல் போன் வசதி படைத்தவர்கள், லட்சக்
கணக்கில் பணம் கொடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரி களில், தங்களது குழந்தைகளை சேர்க்கின்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் வெளி நாடுகளில் உள்ள மருத்துவ கல்லூரிகளில், டாக்டருக்கு படிக்க சீட் வாங்கித் தருவதாக கூறி, புரோக்கர்கள் பலர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றி வருகின்றனர். புரோக்கர்கள், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோரது மொபைல் போன் எண்களை கண்டுபிடித்து, அவர்களை தொடர்பு கொள்கின்றனர்.
அவர்களிடம், குறைந்த கட்டணத்தில், கர்நாடகாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், டாக்டர் சீட் வாங்கித் தருவதாக கூறி, முன்பணம், ஐந்து லட்சம் ரூபாய் வரை பெறுகின்றனர். அதையடுத்து பெற்றோரை, கர்நாடகா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துக் கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று, அங்கு ஏற்கனவே செட்டப் செய்து வைத்துள்ள நபரை காட்டி, இவர்தான் கல்லூரி சேர்மன் என்று அறிமுகப் படுத்தி, மீதி பணத்தை கறந்து
விடுகின்றனர். வெளி நாடுகளில், குறிப்பாக ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக, பெற்றோரை நம்ப வைக்கின்றனர். இது போன்று, கடந்த ஆண்டு மட்டும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 30க்கும் மேற்பட்ட பெற்றோர் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த ஆண்டும், பிளஸ் 2 தேர்வு முடிவு வரும் முன்பே புரோக்கர்கள், பெற்றோர்களுக்கு போன் செய்து, வலைவிரிக்க துவங்கி விட்டனர்.

ஏமாறாதீர் : கடந்த ஆண்டு, மோசடி புரோக்கரிடம் பணத்தை இழந்த, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த முருகன் கூறியதாவது: கர்நாடகா மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமென்றால், அந்த மாநில அரசு நடத்தும் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். இதை அறியாமல், எங்களை போன்ற சிலர், புரோக்கர்களை நம்பி, கடந்த ஆண்டு பல லட்சங்களை இழந்துள்ளனர். கல்லூரியில் சேர பணம் கட்டுவதற்கு முன், கல்லூரி குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். கல்லூரியில் சேர்ப்பதற்கு முன்பாக, புரோக்கர்களிடம், பெற்றோர் பணத்தை கொடுக்கக்கூடாது. தங்கள் குழந்தைகளை, டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று ஆசையில் உள்ள பெற்றோர், விழிப்புடன் இருந்து பணம் கொடுத்து ஏமாறுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினா
பொறியியல் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு: அந்தந்த மாவட்டத்திலேயே நடத்த வேண்டும் DINAKARAN

(இந்த முறையாவது நடக்குமா?)

தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 60 மையங்களில், பொறியியல் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் விற்பனை தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு 2,35,211 விண்ணப்பங்கள் விற்கப்பட்டன. ஆனால், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தவர்கள் 1,90,850 பேர். அதாவது சுமார் 45,000 பேர் விண்ணப்பங்களை வாங்கியதுடன் சரி. பூர்த்தி செய்து சமர்ப்பித்தவர்களில் 1,84,930 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. கலந்தாய்வு மூலம் 1,26,485 பேருக்கு கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. இவ்வளவுக்கு பின்னர் பொறியியல் கல்லூரிகளில் 79,008 காலியிடங்கள் இருந்தன. இந்த ஆண்டில் பிளஸ் 2 பொது தேர்வை சுமார் 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

வழக்கம்போல் இவர்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்களை வாங்குவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், எல்லோருமே விண்ணப்பங்களை சமர்ப்பிப்பார்களா என்பது சந்தேகமே. கல்வியை காசாக்கக் கூடாது என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பத்தில் இருந்தே பொறியியல் கல்லூரி படிப்பை காசாக்குகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களிடமே ரூ. 200 வசூலிக்கிறது. மற்ற பிரிவு மாணவர்களுக்கு ரூ. 500.
இணையதளத்தில் எவ்வளவோ வசதிகள் வந்துவிட்ட நிலையில், சரியான வழிகாட்டுதல்களுடன் விண்ணப்பத்தை இலவசமாக இணையத்தில் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறினால், மாணவர்களுக்கு அதிகபட்சம் ரூ. 50ல் செலவு முடிந்துவிடும். இதுவும் வீட்டிலேயே இணையதளத்தை வைத்திருப்பவர்களுக்கு இவ்வளவு செலவு கூட வராது. இதனால் லட்சக்கணக்கான காகிதங்கள் வீணாக்கப்படுவதை தடுத்து சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்க முடியும்.

இதுமட்டுமின்றி, கலந்தாய்வு என்ற பெயரில், ஒன்றரை மாதத்துக்கு மேலாக சென்னைக்கு மாணவர்களை வரவழைத்து நேர்க்காணல் நடத்துகிறது அண்ணா பல்கலைக்கழகம். இதை அந்தந்த மாவட்டத்திலேயே நடத்த வேண்டும் என்று பலமுறை மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பால் கோரிக்கை விடுக்கப்பட்டும், அண்ணா பல்கலைக்கழகம் பாராமுகமாகவே உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்பதற்காக மாணவர்கள் பஸ், ரயில் செலவு மற்றும் தங்குவதற்கான செலவு, உணவுச் செலவு, இதர போக்குவரத்து செலவு என்று ஏராளமாக செலவழிக்க வேண்டியுள்ளது. மேலும், கலந்தாய்வு சமயத்தில் சாதாரண மக்களுக்கும் பஸ், ரயில்களில் டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிடுகிறது.
இரண்டு விஷயங்களில், ஒன்றுக்கு தற்போது வழியில்லாமல் போய்விட்டாலும், இரண்டாவது விஷயத்துக்கு இன்னமும் கால அவகாசம் இருப்பதால், அண்ணா பல்கலைக்கழகம் இதைப்பற்றி யோசிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
பி.இ. விண்ணப்ப தேதி: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு நீட்டிக்கப்படுமா? அண்ணா பல்கலை. துணைவேந்தர் ராஜாராம் பதில்
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்காக பி.இ. விண்ணப்ப தேதியை நீட்டிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜாராம் கூறினார்.
பி.இ. பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மே 20 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு காரணமாக, சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வுகள் இந்த ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றன. எனவே, இதன் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு மே 3-வது வாரத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதில் சிரமங்கள் உள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த மாணவர்களின் நிலை குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜாராம் கூறியது:
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஜூலையில் முடிக்கப்பட வேண்டும். அதற்காகவே, விண்ணப்ப விநியோகம் சற்று முன்னதாக தொடங்கப்பட்டுள்ளது.
இதில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டால், ஒருங்கிணைப்புக் குழுவைக் கூட்டி, விண்ணப்ப விநியோக தேதியை நீட்டிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.
இந்தத் தேர்வு முடிவுகள் மே 20-ஆம் தேதிக்குள் வெளியிடப்பட்டால், மாணவர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த மதிப்பெண் பட்டியலை முதலில் இணைத்துவிட்டு, மதிப்பெண் சான்றிதழ் நகலை பின்னர் அனுப்ப அனுமதி தருவது தொடர்பாகவும் பரிசீலிக்கப்படும். இந்த நடைமுறை கடந்த ஆண்டு பின்பற்றப்பட்டது. அதே நடைமுறை இந்த ஆண்டும் பின்பற்றப்படலாம்.
இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை, சி.பி.எஸ்.இ. அமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஓரிரு நாளில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது என்றார் அவர்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் மே 14-ஆம் தேதி தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் போதுமானது. விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பம் விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களை வரும்
மே 30-ஆம் தேதி வரை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 2 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், அசல் சான்றிதழ் கிடைக்கப் பெறாத நிலையில் விண்ணப்பத்துடன் கடந்த ஆண்டைப் போலவே மதிப்பெண் சான்றிதழின் நகலை இணைத்து அனுப்பினால் போதுமானது என மருத்துவக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்கும் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பிரச்னை எதுவும் இருக்காது எனத் தெரிகிறது.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பம் குறித்த மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிக்கை வரும் 11-ஆம் தேதி வெளியாகிறது.