மூன்று மாதங்கள் ஆகியும், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்னும் துவக்கப்படாதது, மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் காலம், ஜூலை, 29ல் முடிந்தது; 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் தரவரிசை பட்டியல் வெளியாகவில்லை;கலந்தாய்வுக்கான தேதி கூட அறிவிக்கப்படாதது,மாணவர்களிடையே, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, விண்ணப்பித்த மாணவர்கள் கூறியதாவது:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இறுதி கட்ட கலந்தாய்வும் முடிந்து விட்டது. அடுத்த கட்டமாக உள்ள, மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடந்து வருகிறது. இன்னும், இந்திய மருத்துவ படிப்புகளுக்கு, கலந்தாய்வு தேதி கூட அறிவிக்கப்படவில்லை.
சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள இடங்கள் நிரம்ப, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரிகள், மறைமுக ஆதரவு அளித்து, காலம் தாழ்த்துகின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தேசிய அங்கீகார அமைப்பான, ஆயுஷ் கவுன்சில் அனுமதி தர வேண்டும்; இதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. அடுத்தடுத்து, பல கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்து வருகிறது.
மாணவர் சேர்க்கையை முடிக்க, அக்., 30 வரை அவகாசம் உள்ளது; அதற்குள் கலந்தாய்வை நிச்சயம் முடிப்போம்; விரைவில், தேதி வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment