Sunday, May 4, 2014

பொறியியல் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு: அந்தந்த மாவட்டத்திலேயே நடத்த வேண்டும் DINAKARAN

(இந்த முறையாவது நடக்குமா?)

தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 60 மையங்களில், பொறியியல் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் விற்பனை தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு 2,35,211 விண்ணப்பங்கள் விற்கப்பட்டன. ஆனால், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தவர்கள் 1,90,850 பேர். அதாவது சுமார் 45,000 பேர் விண்ணப்பங்களை வாங்கியதுடன் சரி. பூர்த்தி செய்து சமர்ப்பித்தவர்களில் 1,84,930 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. கலந்தாய்வு மூலம் 1,26,485 பேருக்கு கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. இவ்வளவுக்கு பின்னர் பொறியியல் கல்லூரிகளில் 79,008 காலியிடங்கள் இருந்தன. இந்த ஆண்டில் பிளஸ் 2 பொது தேர்வை சுமார் 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

வழக்கம்போல் இவர்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்களை வாங்குவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், எல்லோருமே விண்ணப்பங்களை சமர்ப்பிப்பார்களா என்பது சந்தேகமே. கல்வியை காசாக்கக் கூடாது என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பத்தில் இருந்தே பொறியியல் கல்லூரி படிப்பை காசாக்குகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களிடமே ரூ. 200 வசூலிக்கிறது. மற்ற பிரிவு மாணவர்களுக்கு ரூ. 500.
இணையதளத்தில் எவ்வளவோ வசதிகள் வந்துவிட்ட நிலையில், சரியான வழிகாட்டுதல்களுடன் விண்ணப்பத்தை இலவசமாக இணையத்தில் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறினால், மாணவர்களுக்கு அதிகபட்சம் ரூ. 50ல் செலவு முடிந்துவிடும். இதுவும் வீட்டிலேயே இணையதளத்தை வைத்திருப்பவர்களுக்கு இவ்வளவு செலவு கூட வராது. இதனால் லட்சக்கணக்கான காகிதங்கள் வீணாக்கப்படுவதை தடுத்து சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்க முடியும்.

இதுமட்டுமின்றி, கலந்தாய்வு என்ற பெயரில், ஒன்றரை மாதத்துக்கு மேலாக சென்னைக்கு மாணவர்களை வரவழைத்து நேர்க்காணல் நடத்துகிறது அண்ணா பல்கலைக்கழகம். இதை அந்தந்த மாவட்டத்திலேயே நடத்த வேண்டும் என்று பலமுறை மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பால் கோரிக்கை விடுக்கப்பட்டும், அண்ணா பல்கலைக்கழகம் பாராமுகமாகவே உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்பதற்காக மாணவர்கள் பஸ், ரயில் செலவு மற்றும் தங்குவதற்கான செலவு, உணவுச் செலவு, இதர போக்குவரத்து செலவு என்று ஏராளமாக செலவழிக்க வேண்டியுள்ளது. மேலும், கலந்தாய்வு சமயத்தில் சாதாரண மக்களுக்கும் பஸ், ரயில்களில் டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிடுகிறது.
இரண்டு விஷயங்களில், ஒன்றுக்கு தற்போது வழியில்லாமல் போய்விட்டாலும், இரண்டாவது விஷயத்துக்கு இன்னமும் கால அவகாசம் இருப்பதால், அண்ணா பல்கலைக்கழகம் இதைப்பற்றி யோசிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment