Wednesday, May 7, 2014

ரஷ்யாவில் மருத்துவம், பொறியியல் படிப்பு: கல்விக் கண்காட்சிக்கு அழைப்பு

சென்னை: பிளஸ் 2 வகுப்பு முடித்த பள்ளி மாணவர்கள் ரஷ்யாவில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பதற்கான சிறப்பு கல்விக் கண்காட்சி ரஷ்ய தூதரகத்தில் நடைபெற உள்ளது.
ரஷ்யாவில் மருத்துவம் மற்றும் பொறியில் படிப்பது குறித்த சிறப்பு கல்வி கண்காட்சி வரும் 10, 11ம் தேதிகளில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில் நடைபெற உள்ளது. அதில் மருத்துவம், பொறியில், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் பாடப்பிரிவுகளை சேர்ந்த 11 பல்கலைகள் கலந்து கொள்கின்றன. மேலும், பிளஸ் 2 வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என 2 மொழியிலும் படித்து 80 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியரில் 40 பேருக்கு தங்கும் வசதி, கல்வி கட்டணம் ஆகியவற்றிற்கு சிறப்பு கல்வி உதவி தொகை வழங்கப்படும்.
எவ்வளவு செலவாகும்?
இதுகுறித்து தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் டிமிட்ரி வி. லொமகின் கூறியதாவது: தற்போது ரஷ்யாவில் ஐந்தாயிரம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த ஆண்டை விட 10 சதவீதம் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடக்க உள்ள கல்வி கண்காட்சியில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான வழிமுறைகள், மாணவர்களுக்கு விளக்கப்படும். ரஷ்ய மொழியில் படிக்க ஓராண்டிற்கு கல்வி கட்டணம் 1,200 முதல் 4,000 அமெரிக்க டாலர்கள் வரையும், ஆங்கிலத்தில் படிக்க 2,400 முதல் 6,500 டாலர்கள் வரையும் செலவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆறு ஆண்டுகள் மருத்துவ படிப்பு ரஷ்ய பல்கலைகளில் அங்கீகாரம் பெற்ற இந்திய பிரதிநிதி ரவிச்சந்திரன் கூறியதாவது: ரஷ்யாவில் வழங்கப்படும் மருத்துவ பட்டம் இந்திய மருத்துவ கவுன்சில், யுனெஸ்கோ, அமெரிக்கா மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது, ரஷ்யாவில் கல்விக் கட்டணம் குறைவு. ரஷ்ய மொழியில் மருத்துவம் படிக்க 7 ஆண்டுகளும், ஆங்கிலத்தில் படிக்க 6 ஆண்டுகளும் செலவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தகுதி என்ன?
பிளஸ் 2 வகுப்பில் பொது பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., / எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். மாணவ மாணவியர் மதிப்பெண் சான்றிதழுடன், வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் கண்காட்சியில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 044 - 2498 8215 / 92822 21221 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

1 comment: